• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

அனுமதியின்றி சாலைப் பணி? தவெக நிர்வாகிகள் மீது சர்ச்சை..,

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து, தாட்கோ நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் 500 மீட்டர் தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்காத நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் முன்னிலையில் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து, தவெக நிர்வாகிகள் ஜே.சி.பி. இயந்திரத்தை பயன்படுத்தி சாலை அமைக்கும் இடத்தை சீரமைக்கும் பணியையும் தொடங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் சில பொதுமக்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

அரசு நிதியில் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படும் சாலைப் பணியை, சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளின் நேரடி பங்கேற்பு இல்லாமல் கட்சி நிர்வாகிகள் தொடங்கியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான முறையான நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளதா, பணியை தொடங்க அதிகாரப்பூர்வ உத்தரவு உள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.