• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மீண்டும் தலை தூக்குகிறதா ‘கந்துவட்டி’..? –  பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன?

ByKalamegam Viswanathan

Aug 25, 2026

கந்து வட்டியை தடுப்பதற்கு தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டிருந்த போதும் கூட, அவசர தேவைக்கு கடன் வாங்கி அவதிப்படும் அவலம் இன்னும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு மதுரையில் கடந்த 15 நாட்களுக்குள் நிகழ்ந்த இரண்டு தற்கொலை சம்பவங்கள் இதனை உறுதி செய்கின்றன. இதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விளக்கமான நேர்காணல் அளித்துள்ளார் விருதுநகர் மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் ஆ.மணிவண்ணன்.

சிதைக்கும் கடன் சுழற்சி

ஒருவருக்கு அவசரமாக ரூ.20 ஆயிரம் தேவைப்படுகிறது. வங்கியில் கடன் கிடைக்கவில்லை. ஆவணங்கள் இல்லை. அடமானம் இல்லை. வருமானத்திற்கான முறையான ஆதாரம் இல்லை. அந்த நேரத்தில் கையில் பணம் வைத்திருப்பவர் உதவுகிறார். ஆனால் அந்த உதவி, சில நேரங்களில் வாழ்க்கையையே சிதைக்கும் கடன் சுழற்சியாக மாறுகிறது.

வட்டிகளில் எத்தனை வட்டி?

‘தின வட்டி’, ‘மணி வட்டி’, ‘மீட்டர் வட்டி’, ‘ரன் வட்டி’ என பல்வேறு பெயர்களில் இயங்கும் சட்டவிரோத அல்லது கட்டுப்பாடற்ற அதிகவட்டி கடன் நடைமுறை, வெறும் பொருளாதாரப் பிரச்னையாக மட்டும் இல்லை. கடன் வசூலிக்க மிரட்டல், அவமானப்படுத்துதல், வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்தல், பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் இழிவுபடுத்துதல் போன்றவை தொடரும்போது அது ஒரு சமூகப் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறுகிறது. அதன் மிகக் கொடூரமான விளைவு — உயிரிழப்பு.

நூற்றாண்டு பிரச்சினை

தனது பணிக்காலத்தில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்கொண்டு அதற்கு சிறப்பான தீர்வினைக் கண்டவரும், விருதுநகர் மாவட்ட முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளருமான முனைவர் ஆ.மணிவண்ணன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், ‘தமிழகம் முழுவதும் அதிகவட்டி தொடர்பான வழக்குகள் உள்ள நிலையில், அண்மையில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு சம்பவங்கள் நடந்துள்ளன. அவ்வழக்கு ஒன்றில் தீயணைப்புப் படை வீரர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

இதுபோன்ற கந்துவட்டி தொடர்பான விவகாரங்கள் கடந்த 100 ஆண்டுகளாகவே இருந்து வருகின்றன. கடந்த 1888-இல் மெட்ராஸ் சிட்டி போலீஸ் ஆக்ட் 51ஏ என்ற பிரிவின் கீழ்தான் பிரிட்டிஷ் ஆட்சியின்போது பணம் கொடுக்கல் வாங்கலில் மக்களை துன்புறுத்துவது குற்றமாக்கப்பட்டது. அதற்குப் பிறகு 1943ஆம் ஆண்டு தமிழ்நாடு பான் புரோக்கர்ஸ் ஆக்ட் என்ற பெயரில் இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது. பணம் கொடுக்கல் வாங்கள் செயல்பாடுகளை முறைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 1957இல் மணி லெண்டர்ஸ் ஆக்ட் கொண்டுவரப்பட்டது. ஆனாலும் கந்துவட்டி, மீட்டர் வட்டி, தண்டல் என இதுகுறித்த சிக்கல்கள் பெருகிய நிலையில் கடந்த 2003ஆம் ஜூன் 9ஆம் தேதி, தமிழக அரசு கந்துவட்டி முறையை ஒழிப்பதற்கு சிறப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அச்சமயத்தில் பாதிக்கப்பட்ட மக்களில் அதிகமானோர் புகார் அளிக்க முன் வந்தனர்’ என்கிறார்.

குடும்பத்துடன் தற்கொலை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கந்துவட்டி பிரச்சினையை முன்வைத்து இசக்கிமுத்து குடும்பத்தினர் தீக்குளித்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ரூ.1.30 லட்சம் கடனுக்கு ரூ.2.30 லட்சம் வரை செலுத்திய பின்னரும் கூடுதல் பணம் கேட்டு தொந்தரவு செய்யப்பட்டதாக குடும்பத்தினர் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வீடியோ வெளியிட்டு தற்கொலை

கந்துவட்டி பிரச்சனை தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மட்டுமல்லாமல், மதுரை நகரம் மற்றும் மாவட்டத்திலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. கரோனா ஊரடங்கால் உணவகத் தொழில் முடங்கிய நிலையில் கடன் சுமையில் சிக்கிய மதுரை மகபூப்பாளையத்தைச் சேர்ந்த முகமது அலி, அதிக வட்டி கேட்டு கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ததாகக் கூறி வீடியோ வெளியிட்ட பின்னர் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவமும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது போன்ற சம்பவங்கள் எல்லாம் தற்போது எடுத்துக்காட்டாக கூறப்பட்டாலும் இன்னும் கவனத்திற்கு வராத நிறைய சம்பவங்கள் உள்ளன.

வெள்ளைத்தாள்களில் கையெழுத்து

தொடர்ந்து மணிவண்ணன் கூறுகையில், ‘பணம் இல்லாமல் இங்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை. ஆனால், தங்களின் தேவையின் பொருட்டு சில நேரங்களில் மிக அவசரம் கருதி வங்கிகளுக்கோ, அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களுக்கோ செல்லாமல் ஏமாற்றும் நபர்களிடம் போய் பொதுமக்கள் சிக்கிக் கொள்ள நேரிடுகிறது. வெறுமனே வெள்ளைத்தாளில் கையொப்பமிட்டுவிட்டு பணத்தைப் பெற்றுவிடுகிறார்கள். தங்களின் சொத்துக்களுக்கான மூல ஆவணங்களையேகூட அவர்களிடம் கொடுத்துவிடுகிறார்கள். இங்குதான் சிக்கலே ஆரம்பம். இந்த நபர்கள் நிர்ணயிக்கின்ற வட்டிதான் பணம் வாங்கிய அப்பாவிகளின் முடிவுக்குக் காரணமாகிவிடுகிறது. 

சமூக கடமைகளே காரணம்

தமிழ்நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடு சமூக கடமைகளை நிறைவேற்ற வேண்டிய புற அழுத்தங்கள்தான். தாய்மாமன் சீர், குழந்தைகளை பெரிய கல்லூரியில் படிக்க வைக்க நினைத்தல் போன்ற உந்துதல்களே இதுபோன்ற அதிக வட்டிச் சிக்கலுக்குள் தள்ளிவிடுகின்றன. கடனுக்கு வட்டி, அதனைச் செலுத்தத் தவறினால், முதலோடு பெருகும் அந்த வட்டிக்கும் சேர்த்து மற்றொரு வட்டி என கொடுமையான சூழலுக்குள் சிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்தப் பணத்தை வசூல் செய்வதற்கு அவர்கள் மேற்கொள்கின்ற மனிதத்தன்மையற்ற நடைமுறைகள்தான் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு ஆளாக நேரிடுகிறது’ என்கிறார்.

எச்சரிக்கும் புள்ளி விவரங்கள்

கந்துவட்டி காரணமான தற்கொலைகளுக்கு தனியாக ஒருங்கிணைந்த அதிகாரப்பூர்வ மாநில/மாவட்டத் தரவுத்தொகுப்பு இல்லாத நிலையில், NCRB-யின் “Bankruptcy or Indebtedness” என்ற பிரிவு கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள உதவும்.
2024-ல் இந்தியாவில் மொத்தம் 1,70,746 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதில் 7,529 உயிரிழப்புகள் “bankruptcy or indebtedness” என்ற காரணப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன — மொத்த தற்கொலைகளில் சுமார் 4.4%. இந்தப் பிரிவில் 2023-ஐ விட 2024-ல் சுமார் 15% உயர்வு ஏற்பட்டதாக NCRB தரவுகள் தெரிவிக்கின்றன.

வட்டி மட்டும் அல்ல — வசூல் முறைதான் ஆபத்து

ஒரு கடன் அதிக வட்டியில் வழங்கப்பட்டாலும், சட்டப்படி நடக்கும் வசூல் நடைமுறை வேறு. ஆனால், வீட்டிற்கு சென்று மிரட்டுதல், தொலைபேசியில் தொடர்ந்து தொந்தரவு செய்தல், குடும்பத்தினரை அவமானப்படுத்துதல், குழந்தைகள் அல்லது உறவினர்கள் முன்னிலையில் இழிவுபடுத்துதல், சொத்துகளை வற்புறுத்திப் பெறுதல், அடியாட்கள் மூலம் வசூலித்தல் போன்றவை நடந்தால் அது வெறும் நிதி பரிவர்த்தனை அல்ல; coercive recovery ஆகிறது.

கவனத்திற்கு வராத வழக்குகள்

மணிவண்ணன் கூறுகையில், ‘வட்டிக்கு பணம் தருவோர் கடும் சட்ட நடைமுறைகளையும் ஏமாற்றி, தங்களது செல்வாக்கைப் பயன்படுத்தி தப்பித்துவிடும் நிலையும் உள்ளது. இதுபோன்ற அதிக வட்டி வழக்குகள் பெரும்பாலானவை காவல்துறையின் கவனத்திற்கு வராமலேயே போகும் நிலையும் உள்ளது. தற்போது மதுரை மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், இக்கொடுமையின் தீவிரத்தைக் காட்டுகிறது என்றே நான் நினைக்கிறேன். செய்தியாக வராத சம்பவங்கள் இன்னும் நிறைய இருக்கலாம். கந்துவட்டி தொடர்பாக இக்குறிப்பிட்ட சட்டம் தெளிவாக மட்டுமன்றி கடுமையாகவும் உள்ளது. ஆனாலும் சில நேரங்களில் பொதுமக்களின் அறியாமை இதற்கு காரணமாகிவிடுகிறது.

மக்களிடமும் மாற்றம் வேண்டும்

இந்நிலையில் நமது மக்கள் மனநிலையிலும் மாற்றம் தேவை. சமூகம் சார்ந்த செலவுகளை ஆடம்பரமாக மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். வருமானத்தில் குறிப்பிட்ட ஒரு பகுதியை சேமித்து, அதிலிருந்து தாங்கள் வாங்கிய கடனைக் கட்டலாம். இன்றைய காலகட்டத்தில் கடன் வாங்காமல் வீடோ, திருமணமோ செய்ய முடியாது என்றாலும், அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் உள்ளிட்ட நிதிநிறுவனங்களின் நடைமுறைகளைப் பின்பற்றி கடன் வாங்குவதுதான் நமக்கு நல்லது. இதுபோன்ற கடன்களை, சூழல்களைப் பொறுத்து நமது மத்திய, மாநில அரசுகளே தள்ளுபடிகூட செய்துவிடுகின்றன. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினருக்கு வழங்குகின்ற சலுகைகளைப் பெறுவதற்கான முயற்சிகளை பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டும்.

அரசின் கடன் வசதிகள்

வந்த பின்பு காப்பதற்கு சட்டநடைமுறைகள் இருந்தாலும், வருமுன் காப்பதற்கு பொதுமக்கள் தயாராக இருக்க வேண்டும். தனிநபர்களிடம் கடன் பெறுவதை பெரும்பாலும் தவிர்ப்பதே நல்லது. தொழில் முனைவோராக இருந்தால் மத்திய அரசின் முத்ரா உள்ளிட்ட திட்டங்களின் வாயிலாக தருகின்ற கடன் வசதிகளைப் பெற முயற்சிக்க வேண்டும். இதுபோன்று கடன் வழங்குகின்ற வங்கிகள், அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களை அணுகிப் பெற்றால், நாளை இதில் ஏதேனும் இடர்ப்பாடுகள் இருக்குமானால் முறையாக நீதிமன்றங்களை நாடி தீர்வினைப் பெற முடியும். இவற்றையெல்லாம் நம் மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

உயிரை மாய்ப்பது தீர்வல்ல

இதற்காக உயிரை மாய்த்துக் கொள்வதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஒரு சில சம்பவங்களில் குடும்பம் மொத்தமும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறது. சிலர் ஊரைவிட்டே வெளியேறி வெளி மாநிலங்களில் தஞ்சம் புகும் நிலையும் உள்ளது. முன்னதற்கு பின்னது சரியென்றாலும், அதையும் தவிர்க்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்களில் காவல்துறையையோ அல்லது வழக்கறிஞர் மூலமாக நீதிமன்றங்களையோ நாடிச் செல்ல வேண்டும்’ என்கிறார்.

இனி ஒரு மரணம் நிகழாது

மதுரையில் நடைபெற்ற இவ்விரண்டு தற்கொலை சம்பவங்கள் கந்து வட்டி சிக்கலின் தீவிரத்தை உணர்த்துகின்ற காரணத்தால் மதுரை மாவட்ட மற்றும் மாநகர காவல் துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது தொடர்பான வழக்குகள் மதுரை மாவட்டத்தில் எந்தெந்த காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்கள் தயாரிக்கப்பட்டு வருகினாறன. அதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை காவல்துறை திட்டமிட்டு, இனி ஒரு மரணம் நிகழாத வண்ணம் தேவையான அனைத்து செயல்பாடுகளும் முன்னெடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.