தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் பாத்திமா பாபு, வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பழரசம் விநாயகமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு: கரோனா பெருந்தொற்று மிகவும் குறைந்து வரும் நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையில் தமிழக அரசால் நிரந்தரமாக மூடப்பட்ட ஸ்டெர்லைட் நச்சு ஆலையிலிருந்து ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கப்பட்ட ஜீலை 31-ம் தேதியை கடந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க கூடாது.
முதலமைச்சர் வாக்குறுதி அளித்தபடி நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். இது தொடர்பாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி படுகொலைக்கு காரணமான குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து அரசு பணி கிடைக்காது விடுபட்டவர்கள் அனைவருக்கும் அரசுப் பணி வழங்கிட வேண்டும். போராட்டத்தில் படுகொலையுண்ட 15 தியாகிகளின் நினைவாக தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் நினைவகம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அரி ராகவன், மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட தலைவர் மருத பெருமாள், மக்கள் அதிகாரம் செல்வக்குமார், நாம் தமிழர் பாக்கியராஜ், சுடலைமணி, அன்னலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி, எஸ்டிஎப்ஐ மைதீன் கனி, தங்கையா, தெர்மல் ராஜா,விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கிடர் பிஸ்மி உட்பட பலர் கலந்து கொண்டனர்.