வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் வருவதாலும் அணையின் நீர்மட்டம் உயர்ந்து நேற்று காலை 6 மணி நிலவரப்படி 68 -11 அடியாக உயர்ந்து உள்ளது .71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் ஓரிரு நாளில் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வருஷநாடு ,மேகமலை மற்றும் கொட்டகுடி ஆற்றில் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதாலும், முல்லைப்பெரியாறில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது . இதனையடுத்து ஐந்து மாவட்ட கரையோர கிராம மக்கள் பாதுகாப்பு கருதி ,தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் உத்தரவின் பேரில் கடந்த 13 ஆம் தேதிமுதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
வைகை அணைக்கு நீர்வரத்து நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 1370 கன அடியாக உள்ளது. அணையிலிருந்து மதுரை, தேனி மற்றும் ஆண்டிட்டி, சேடபட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வினாடிக்கு 69 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் பாசனத்திற்காக 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது .அணைக்கு நீர்வரத்து இதே அளவு நீடிக்கும் நிலையில் ஓரிரு நாளில் அணையின் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 68.5 அடியை எட்டியதும் இரண்டாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் .69 அடி ஆனதும் மூன்றாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ,அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் .பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.55 (142)அடியாகவும் ,நீர்வரத்து வினாடிக்கு 2324 கன அடியாகவும் உள்ளது. பெரியாற்றில் இருந்து தேனி மாவட்ட பாசன பகுதி வாய்க்கால் வழியாக வினாடிக்கு ஆயிரத்து 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.