காவல் நிலையத்தில் ஏற்படும் லாக் அப் மரணங்களை தடுப்பது குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் திருச்சியில் நடைபெற்றது. முகாமிற்கு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமை தாங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் சுமார் 950 மரணங்கள் 10 ஆண்டுகளில் காவல் நிலையத்தில் நடைபெற்று உள்ளது. அதில் தமிழ்நாட்டில் 84 மரணங்கள் நடைபெற்றுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் இனி ஒருவர்கூட காவல் துறை கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் உயிர் இழக்கக் கூடாது என்று உத்தரவிட்டார். அந்த அடிப்படையில் இந்த பயிற்சி முகாம் நடைபெற்றுவருகிறது. காவலர்களுக்கு ஏற்படும் மன இருக்கத்தை குறைப்பதற்காக கட்டாய ஓய்வு வழங்கப்பட்டு வருகிறது.
ஆபத்து வரும்போது காவலர்கள் திறமையாக செயல்பட வேண்டும். பொதுமக்களை காவல்துறையினர் ஆபத்து நேரத்தில் காப்பாற்றுவது குறித்த விழிப்புணர்வு அதிகமாக ஏற்படுத்தி வருகிறோம். கள்ளச்சாராயம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஒரு சில மலைப் பகுதிகளில் மட்டும் விற்பனை நடைபெற்றுவருதை அறிந்துள்ளோம். அதனையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். தற்போது காவல்துறையில் சேர்வதற்காக 10,000 காவலர்கள் பயிற்சியில் உள்ளார்கள். கல்லூரிகளில் வன்முறை மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்கு பதியப்படும். காவலர்களை மக்கள் தாக்கினால் தற்காத்துக்கொள்ள அவர்களுக்கு வர்மக்கலை, கராத்தே குங்பூ உள்ளிட்ட தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
லாக்அப் மரணங்களை தடுக்க காவலர்களுக்கு பயிற்சி முகாம் -டி.ஜி.பி.சைலேந்திரபாபு தகவல்
