யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் தனியார்மயத்திற்கு ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஊழியர்கள் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓன்றிய பாஜக அரசு தனியார் மயக் கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது. நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் வசம் ஒப்படைக்க்பபட்டு வருகின்றன. பொன் முட்டையிடும் நிறுவனமாக ஏழை மக்களுக்கான சிறப்பு திட்டங்களைக் கொண்ட ஆயுள் காப்பீட்டுக்கழகம் மற்றும் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா நேசனல் இன்சூரன்ஸ் நியு இந்தியா அசுரன்ஸ் ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களையும் ஒன்றிய பாஜக அரசு தனியார்மயமாக்குவது என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின் போது அறிவித்தார். அதன் அடிப்படையில் ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அமைப்பு முதல்கட்டமாக யுனைடெட் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்க பரிந்துரை செய்துள்ளது.
ஒன்றிய அரசின் இந்த முடிவை எதிர்த்து திண்டுக்கல்லில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் அதிகாரிகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி பின்புறம் அமைந்துள்ள கிளை அலுவலகம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தலைவர் பி.எஸ் பெரியசாமி தலைமை வகித்தார். மண்டல பொதுச்செயலாளர் வி.ரமேஷ் மாவட்டச்செயலாளர் ஆர்.கௌதமன்; காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்ட துணைத்தலைவர் எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் பொது இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கம் சார்பாக வி.எஸ்.சேகர் முகவர் சங்கம் சார்பாக எம்.ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கிளைச்செயலாளர் ஆர்.ஏ.எல்.பிரபாகரன்ää நன்றி கூறினார்.