• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மிரண்டு போன தமிழகம்… பொள்ளாச்சி வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி!…

By

Aug 11, 2021

கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை பாலியல் கொடுமை செய்து, அதனை வீடியோ படம் எடுத்த கும்பல் மிரட்டி பணம் பறித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகள் எழுப்பியது. கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்து பதிவு செய்த பாலியல் கொடுமை வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் ஏற்கெனவே கைதுசெய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைதாகியுள்ளனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே இந்த வழக்கில் கோவை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாகவும், ஆனால் சில விளக்கங்களை நீதிமன்றம் கேட்டு வருவதாகவும் தெரிவித்தார். சிபிஐ-யில் ஆட்கள் பற்றாக்குறையால், வழக்கு விசாரணை நடத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அப்போது ஆஜராகியிருந்த தமிழ்நாடு காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ விரைந்து முடிக்க தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும், குறிப்பாக எஸ்.பி. அந்தஸ்திலான ஒரு அதிகாரியை நியமித்து உதவ தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி தண்டபாணி, குற்றம்சாட்டப்பட்ட அருளானந்தம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து விசாரணையை 6 மாதத்தில் முடிக்க கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

சிபிஐ விசாரணைக்கு உதவும் வகையில் சிபிசிஐடி எஸ்.பி. முத்தரசியை நியமித்தும் உத்தரவிட்டுள்ளார்.