• Thu. Apr 18th, 2024

அறிக்கை தாக்கல் செய்ய டான்ஜெட்கோவுக்கு உத்தரவு!…

By

Aug 11, 2021

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கன்வேயர் திட்டப் பாதையை மாற்றியதை எதிர்த்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல்மின் நிலையத்துக்கு நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் திட்டத்துக்கான பணிகள் நடைபெறுகிறது.

சட்டப்படி அனுமதிக்கப்பட்ட பாதையிலிருந்து விலகி செல்வதோடு, சுற்றுச்சூழல் அனுமதியும் மீறி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறி, காட்டுக்குப்பத்தைச் சேர்ந்த செல்வராஜ் துரைசாமி என்ற மீனவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கொற்றலை ஆற்றை கடந்து செல்லும் வகையில் வழித்தடம் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆற்றின் உள்ளேயே தளம் அமைத்து கன்வேயர் பெல்ட்டை கொண்டு செல்லும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கை விசாரணைக்கு எடுத்து பதிலளிக்க உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கன்வேயர் அமைப்பது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி டான்ஜெட்கோ-வுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *