• Thu. Apr 18th, 2024

மன்மத லீலை படமும் பழைய படத்தின் உள்ட்டாவா? வெங்கட்பிரபு வாக்குமூலம்

மாநாடு’ படத்தைத் தொடர்ந்து, ‘மன்மதலீலை’ என்ற அடல்ட் காமெடி கொண்ட திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட்பிரபுவெளியிட்டுள்ளார்.இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு, எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம் ‘மாநாடு’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில், வெங்கட் பிரபுவின் அடுத்தபடம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் இந்தப் படத்திற்கு ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அசோக்செல்வன் கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர்.

வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த மணிவண்ணன், இந்தப்படத்தின் கதையை எழுதியுள்ளார். ‘மன்மதலீலை‘ திரைப்படம் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு கூறுகையில், “இந்தப் படம் மிகவும் நகைச்சுவையாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும். திருமணத்துக்கு பிந்தைய காதலைச் சுற்றி நடக்கும் கதையைக் கண்ட ஜாலியான படம். இந்தப் படம் 1980-களில் கே.பாக்யராஜ் இயக்கிய ‘சின்ன வீடு‘ படத்தின் நவீன வடிவமாகவும், பார்வையாளர்களுக்கு புதுவித திரைக்கதை அனுபவத்தை தருவதாக இருக்கும். ஒரு இளைஞனின் வாழ்க்கையில் வெவ்வெறு காலக்கட்டங்களில் நடக்கும் இரண்டு முக்கிய சம்பவங்களைப் பற்றிய கதை இது.
ஊரடங்கு நேரத்தில், இந்தக் கதை பற்றி எனது உதவி இயக்குநர் மணிவண்ணனும், நானும் கலந்துரையாடினோம். அப்போது மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்தக் கதை இருந்ததால், இதனை ஸ்கிரிப்ட்டாக மாற்றுமாறு அவரிடம் கூறினேன். நகைச்சுவை மட்டுமின்றி, ‘மன்மதலீலை‘ படத்தில், கதாநாயகன் கடைசியில் சிக்குவாரா, சிக்கமாட்டாரா என்ற த்ரில்லரும் நிறைந்து இருக்கும். மேலும், ‘மாநாடு‘ படத்திற்கான பணிகள்செய்துகொண்டிருந்தபோதே, இந்தப்படத்தை எடுத்து முடித்துவிட்டோம்” இவ்வாறு வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

‘மன்மதலீலை’ படத்தை முதலில் ஓ.டி.டி. தளத்தில் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டநிலையில், தற்போது படத்தை பார்த்தவர்கள் மிகவும் அருமையாக உள்ளது என்று கூறியதால், படத்தை திரையரங்கிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். ‘மன்மதலீலை’ படம் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்தவர் கதையை, முதல்முதலாக இயக்குகிறார். மேலும், தன்னுடைய வழக்கமான பட நண்பர்கள் அணியினர், யுவன் சங்கர் ராஜா போன்றோர் இல்லாமல், வேறு ஒரு அணியினர் இந்தப் படத்தில் பணிபுரிகின்றனர். ‘மன்மதலீலை’ படத்திற்கு வெங்கட் பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி அமரன் இசையமைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *