• Thu. Apr 25th, 2024

பொறுப்பேற்றார் புதிய மதுரை ஆதீனம்… அப்போ நித்தியானந்தா கதி?..

By

Aug 14, 2021

தமிழகத்திலேயே தொன்மையான சைவ மடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை முதலே அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார்.

மதுரை ஆதீனத்தின் கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.

இந்நிலையில் அடுத்த ஆதீனம் யார் என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே நித்தியானந்தா வேறு அடுத்த ஆதீனம் நான் தான் எனக்குறிப்பிட்டு முகநூலில் பதிவிட்டது சர்ச்சையைக் கிளப்பியது. இதனிடையே கடந்த 2019ஆம் ஆண்டு இளைய மடாதிபதியாக மதுரை ஆதினம் அருணகிரிநாதர் அவர்களால் முடிசூட்டப்பட்ட, ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹர தேசிய ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அவர்கள் மதுரை ஆதீன மடத்தின் 293வது மடாதிபதியாக இருப்பார் என மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர்.

இன்று காலை மதுரை ஆதீன 293 ஆவது பீடத்தில் எழுந்தருளயிருக்கும் ஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு தருமை ஆதீன 27 ஆவது குருமகா சந்நிதானம் தமது திருக்கரங்களாலே ஞானாபிஷேகம் செய்து வைத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *