• Mon. May 20th, 2024

பாலியல் குற்றங்களில் பாலகர்கள் – த. வளவன்

Byadmin

Aug 6, 2021

பண்பாட்டுக்கு பேர் போன நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது கவலையளித்தாலும், காலத்தின் கோலத்தால், ஒட்டுவார் ஒட்டியாக வந்த உலகமயத்தின் தாக்கம் என ஓரளவு ஆறுதல் அடையலாம். ஆனால், பாலியல் குற்றவாளிகளில் பெரும்பாலானோர் பாலகர்கள் எனும் போது அதிர்ச்சிக் கணைகளின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. இந்தியாவில் கடந்த 2001 முதல் 2020 வரை 20 ஆண்டு காலத்தில் குழந்தைகளுக்கெதிரான குற்றமும், குழந்தைகள் செய்யும் குற்றமும் 50% மேல் அதிகரித்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம், நாட்டில் 2011ல் நடந்த பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 67% பேர் இளஞ்சிரார்கள் என அறிவிக்கிறது. 2013 ல் 1316 இளஞ்சிரார்கள் பாலியல் வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டதாக கூறுகிறது. இதே ஆண்டில் மானபங்க செயலில் ஈடுபட்ட சிறுவர்கள் 685 பேர். இதில் 249 பேரைக்கொண்டு மத்தியபிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அதையடுத்து 110 பேரைக்கொண்டு உத்தரபிரதேசம் இரண்டாமிடத்தில் உள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட சிறார்கள் எண்ணிக்கை 27. மானபங்க செயல் புரிந்த சிறார்கள் 11 பேர்.

தலைநகர் டெல்லியில் குற்ற இளஞ்சிறார்கள் 2009ல் 37, 2010ல் 35, 2011ல் 51 பேர். அதில், பாலியல் வல்லுறவில் ஈடுட்டோர் 2009ல் 26, 2010ல் 37, 2020 களில் பலமடங்கு உயர்ந்துள்ளது.

பஞ்சாப் லூதியான மாவட்டத்தில் 7ஆம் வகுப்பு மாணவன் தனது வகுப்பு சக மாணவியிடம் வல்லுறவு கொண்டுள்ளார். சென்னையில் மாணவனை ஆசிரியை இழுத்துக்கொண்டு ஓடிய இழிவான சம்பவமும் நடந்துள்ளது. சராசரியாக கணக்கிட்டால் மத்திய பிரதேசத்தையடுத்து மகாராஷ்ராவில் இளஞ்சிறார்கள் அதிக எண்ணிக்கையில் குற்றம் புரிந்துள்ளனர். இங்கு பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகள் அதிகம் என்பதால் குழந்தைகள் குற்றத்திலும் முன்னணியில் உள்ளது என்கிறார்கள்.

ஆனாலும், 2020ல் நடந்த அகில இந்திய அளவிலான சிறார் குற்றங்களை ஆராய்ந்து பார்த்தால், வீதியில் விடப்பட்ட வறுமையால் வளர்க்கப்பட்ட சிறுவர்கள் தான் குற்றங்கள் இழைக்கிறார்கள் என்ற வாதம் அடிபட்டுபோகிறது. அப்போது குற்றமிழைத்த சிறார்களில் 50%க்கு மேற்பட்டோர், ரூ.50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை ஆண்டு வருவாயும் சொந்த வீடுகளும் உள்ள பெற்றோருடன் வசித்தவர்கள் தான்.

கடந்த காலத்தில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் கொடுங்குற்றம் புரிந்த சிறார்களை பொதுச்சட்டப்படி விசாரித்து தண்டனையளித்தனர். இதனால் குற்றங்கள் கூடியதே தவிர குறையவில்லை. எனவே அவர்கள் மீண்டும் பழைய முறைக்கு வந்துவிட்டனர். குழந்தைகள் குற்றம் கூடுகிறதே என்ற பதைபதைப்பில் சட்டத்தை திருத்த நினைப்பது கொசுவுக்கு பயந்து வீட்டை கொளுத்துவதாகவே அமையும் என மழலைகள் மன ஓட்டத்தை அறிந்த மனநல சட்ட வல்லுநர்கள் மறுத்துரைத்தனர்.

நமது மூளையின் முன்பகுதியான ஃபிராண்ட் லோப் 18 வயது வரை வளர்கிறது. அது முழு வடிவம் அடையும் வரை சிந்தித்து முடிவெடுப்பதால், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது சிறார்களுக்கு சிரமமாக இருக்கும். மேலும், அந்த வயதில் போதிக்கின்ற அனைத்தும் ஆராய்ச்சி அறிவின்றி மனதில் பதியும். எனவேதான் நல்லது, கெட்டது என பரித்தறிய முடியாமல் தீய செயல்களில் தீஞ்சுவை சுருதி இவ்வாறான ஈனச்செயல்களில் சிறார்கள் ஈடுபட்டுவிடுகிறார்கள்.

சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட பெரிதும் காரணம் பெரியவர்கள் என்றால் சிறுதும் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ தேவையில்லை. நமது குடும்ப அமைப்பு பிள்ளைகளை பெறத்தகுந்ததாக இருக்கிறது. ஆனால், நன்முறையில் வளர்க்க முடியாததாக மாறிவிட்டது. கூட்டுக்குடும்ப வாழ்வின் அத்தை மகளையும் அக்காள் தங்கை போல் கருதும் மனநிலை இருந்தது. ஆனால், இப்போது தனிக்குடும்பத்தில் தனியறை, தனி வசதி, வாய்ப்புகளை பெற்ற குழந்தைகளின் கண்கள் வழியாக மனதில் சாத்தான் எளிதில் நுழைந்துவிடும் சாத்தியம் உள்ளது.

குடும்பம் இப்படி என்றால், வெட்கம் கெட்டதாகவும், விமர்சிக்க தகுதியற்றதாகவும் மாறிவிட்ட சமூக அமைப்பு குற்றவாளிகளுக்கு அடைக்கலம் அளிக்கவும், ஆதரிக்கவும் துணிந்துவிட்டது. ஒரு காலத்தில் ஊருக்கொரு பஞ்சாயத்து இருந்து முளையிலேயே குற்றச்செயல்களை கிள்ளியெறியும் முனைப்புடன் செயல்பட்டது. ஆனால், இப்போதோ யார், எக்கேடோ கெட்டும் என்ற விட்டேத்தி மனோபாவம், குற்றவாளிகளுடன் ஒட்டி உறவாடி உறிஞ்சிக் குடிக்கும் ஒட்டுண்ணி குணமும் பெரும்பாண்மையோரின் பிறவி இயல்பாகிவிட்டன. இந்த சமூக அமைப்பு உருவாக காரணமாக அரசிய, பொருளாதார, பண்பாட்டு காரணிகள் பலவீனமானவையாகிவிட்டன. ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் ஊத்தைகளாகவும், சட்ட விதிமுறைகள் ஓட்டைகளாகவும் ஆகிவிட்டன.

நடிகர்களின் ஹீரோயிசம் பெரியவர்களின் வாழ்க்கை முறை ஆசரியர்களின் அணுகுமுறை தாய் தந்தையரின் அரவணைப்பு இவையெல்லாம் குழந்தைகள் குற்றங்களை கட்டுப்படுத்தும் மந்திரங்கள். ஆனால் இப்போது ஹீரோயிசம் என்பது குவார்ட்டர் குடித்துவிட்டு வாந்தி எடுப்பது, நண்பரின் தங்கையை கரெக்ட் செய்வது என்றாகிவிட்டது.

பெரியவர்களின் வாழ்க்கை முறையே லஞ்ச லாவண்யம் முறையற்ற உறவு என முன்னுதாரணம் காட்டுகிறது. ஆசிரியர்கள் செல்வந்தர் பிள்ளைகளை சீராட்டவும் பிள்ளைகள் போன்ற மாணவிகளிடம் தவறாக நடக்கவும் தொடங்கிவிட்டனர். தாய், தந்தையரோ கஷ்டப்பட்டு சம்பாதித்து விலை உயர்ந்த கல்வி நிலையத்தில் சேர்த்துவிடுவதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டது என கைகழுவி விடுபவர்களாகவே இருக்கின்றனர்.

கடுமையான தண்டனை பாலகர்கள் மனப்பக்குவத்தை மாற்றுமா, அல்லது குற்றச்செயல் உணர்வை கூட்டுமா என்று ஆராய்ந்தால் எதிர்விளைவே ஏற்படும் என எச்சரிக்கிறது டெல்லி நிர்பயா வழக்கை விசாத்த வர்மா கமிஷன். ‘கடுமையான தண்டைனையே விட மறுவாழ்வளிக்கும் நடவடிக்கையே சமூகத்தில் குற்றங்களை குறைக்கும்’ என அது பரிந்துரைக்கிறது.

சிறைவாசம் மனிதனை சீர் திருத்துவதை விட சீரழிக்கும் என்பதை அனைவரும் அறிவர். சிறைத்தட்டனையா, சீர் திருத்த நடவடிக்கையா என்றால் சிறார்கள் மறுவாழ்வுக்கு சீர்திருத்தமே சிறப்பானதாக அமையும் என்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.

நினைத்துப்பாருங்கள், இது பெரியவர்களுக்கான உலகமாகவே இருக்கிறது. மக்கள் தொகையில் சுமார் 40% ஆக இருக்கும் குழந்தைகளுக்கான கலாச்சார கல்வி, விளையாட்டு, கலை, இலக்கிய படைப்புகள் எத்தனை விழுக்காடு என்பதை எண்ணிப்பாருங்கள். இங்கு நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்கள் அனைத்தும் பெரிவர்களுக்கானதே.

பள்ளி கலை விழாவில் ‘மங்கா, மாங்கா குண்டு மாங்கா’ என குத்துப்பாடலுக்கு குழந்தைகளை ஆடவிட்டு குதூகலிக்கிறீர்கள். குழந்தைகளுக்கான தொலைக்காட்சி பாடல் போட்டியில் காதல் பாடல்கள் பாடக்கேட்டு பெற்றோரும் பெரியோரும் செவி குளிர்கிறீர்கள். உங்களுக்கான நிகழ்ச்சிகளின் அவர்களை பார்வையாளர்களாக்குகிறீர்கள். ஆனால் அவர்களுக்காக வாழ்வதாகவே கதையளக்கிறீர்கள்.

எனவே மரபார்ந்த வழியில் பிள்ளைகளை வளர்ப் பதை கடமையாக கருதி பொற்றோர்கள் செயல்படவேண்டும். வீட்டுக்குள் ஊடுருவும் மோசமான காட்சிகளை வடிகட்ட அரசு ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவேண்டும். கல்வி காசற்றதாகவும் கவலையற்றதாகவும் குழந்தைகளின் உணர்வுகளை தொட்டு உலுக்குவதாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கான அமைப்புகளை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். எல்லாவற்றையும் விட பெரியவர்களாகிய நாம் திருந்தி இந்த குடும்ப அமைப்பை, சமூக அமைப்பை அரசியல் அமைப்பை கலாச்சார பண்பாட்டு மையங்களை, கல்வி நிலையங்களை, கலை, இலக்கிய அமைப்பை, காலச்சார , பண்பாட்டு மையங்களை, கல்வி நிலையங்களை, கலை, இலக்கிய வடிவங்களை, ஊடக, இதழியல் துறைகளை சீர்படுத்தாவிட்டால் சிறார் குற்றம் இன்னும் பன்படங்கு பெருகி நம் பிள்ளைகள் நமக்கு பாடம் கற்பிக்கும் நிலையே உருவாகும்.

குழந்தைகள் உலகம் தெய்வலோகம் என்பார்கள். உலக அளவில் சிறார் குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கும் நிலையில் பண்பாட்டின் பயன்பாட்டில் இருக்கும் நமது நாட்டிலும் அது குறைந்தபாடில்லை என்பது நமது குற்ற மனப்பான்மையை குத்திக்குதறுகிறது.

நாட்டில் 2011ல் 43,338 சிறார்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகினர். 33,000 சிறார்கள் குற்றவாளிக் கூண்டில் ஏறினார். அடுத்த ஆண்டில் இந்த குற்ற எண்ணிக்கையும் குற்றவாளிகள் எண்ணிக்கையும் கூடுதலானது. அப்போது கைது செய்பப்பட்ட சிறார் குற்றவாளிகள் 35,495 பேர். அவர்களில் 16% பேர் கொலை, கடத்தல், பாலியல் வன்முறை வழக்குகளில் கைதானவர்கள் என்பது மேலும் அதிர்ச்சி அலையை பரவவிட்டது. ஆனால் இன்றோ அதன் எண்ணிக்கை பத்து மடங்கை கடந்து விட்டது.

இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே குழந்தைகள் குற்றச்செயல்கள் நூற்றுக்கணக்கில் பதிவானது. திருச்செங்கோட்டில் பள்ளிக்குள் மதுவருந்தி பரபரப்பை ஏற்படுத்தியது. பந்தல் குடியில் ஹோமோ செக்சுக்காக 9ம் வகுப்பு மாணவனை பலிகொண்டது. சென்னையில் தவறை கண்டித்த கணினி ஆசிரியை கன்னத்தில் அறைந்தது என தொடர்ந்து அரங்கேறிய வன்முறை சம்பவங்களால் வயதுக்கு வந்தோறும் வாயடைத்து போனார்கள். வேலூர் குடியாத்தத்தில் 6ம் வகுப்பு மாணவியை வன்பாலுறவு கொண்ட மாணவன், இணையத்தில் பார்த்த இளமைக்காட்சியால் இந்த ஈனச்செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

குழந்தைகள் மனதில் வன்முறை குடியேற இன்றைய வாழ்க்கை முறை முக்கிய காரணம். அதை வடிவமைக்கும் அரசியல், சமூக பொருளாதார காரணனிகளும் ஆராயப்படவேண்டியவை. ஊரோடும் ஊடகங்களும் சிறார் மனதை ஊசலாடச் செய்கின்றன. அவர்கள் விரும்பிப்பாக்கும் பவர் ரேஞ்சர்ஸ் தொடரில் வெட்டுவது சுடுவதெல்லாம் அனிச்சை சம்பவங்கள். மனிதர்கள் அடித்துக்கொள்ளும் டபிள்யூ.டபிள்யூ.எஃப் மல்யுத்தச் சண்டை மசாலா தடவிய தின்பண்டமாக மாணவர்களை ஈர்க்கிறது.

இதைப் பார்த்துப் பார்த்து வக்கரித்துப் போன சிறார் வானங்கள் மோதும் விபத்துக்கள் வாண வேடிக்கையாகவும், அதில் குருதி சிந்த மடியும் மனிதர்கள் கார்ட்டூன் பாத்திரங்களாகவே பதிவாகின்றன. நாளடைவில் ஈவிரக்கம் என்னும் மனிதப் பண்பின் ஈரம் மனதில் இருந்து துடைத்தெறியப்படுகிறது. இத்தகைய காட்சிகளை கண்ணுறும் சிறார்கள் குற்ற உணர்வு இல்லாத ஆன்டி சோஷியல் பர்சனாலிட்டி டிஸார்டர் எனும் ஆபத்தான மனநோய்க்கு ஆளாகின்றனர்.

இணையதளங்கள் ஆபாச குப்பைகளை எளிதில் எடுத்துவருகின்றன முன்பெல்லாம் இதில் நுழைய குறைந்தபட்ச அறிவு தேவைப்பட்டது. ஆனால், இப்போதோ தேவையான படங்கள் தேடவேண்டியதில்லை. விரும்பும் பொருளின் பெயரில் சில எழுத்துக்களை தட்டினால் போதும் விழிகளுக்கு முன்னால் விரசம் வழிகிறது. அம்மா என்று சும்மா தட்டினாலே உறவுக்கு பொருந்தாத ஊதாரிக்கதைகள் திரையில் நிழலாடுகின்றன.

வீடுகளிலும் பள்ளிகளிலும் சிறைப்படுத்தப்படும் சிறார்களை இனிய இயற்கை உலகமும் இதயப்பூர்வமான சம்பவங்களும் ஈர்ப்பதில்லை. தொலைக்காட்சி விளம்பரங்கள் அவர்களை ஆடம்பர உலகுக்கு அழைத்துப் போகின்றன. அனைத்தையும் அடையும், அனுபவிக்கும் ஆசையை அவர்கள் நெஞ்சில் விதைக்கின்றன. குழந்தைகளுக்கு பெற்றோர் செல்வமும் கொடுத்துக்கெடுக்கிறார்கள். ஊடகம் ஆசையூட்டி அடுத்துக்கெடுக்கிறது. கைபேசிகள் நமது பிள்ளைகளை பொய் பேசிகளாக்குகின்றன. அதில் அரட்டை அடிக்கவும், ஆபாச படங்கள் பார்க்கவும் பழக்குவதற்கு ஒரு கூட்டமே நகர்புறத்தில் நடமாடுகிறது.

டெல்லியில் தன் வகுப்பு மாணவியுடன் உறவு கொண்டு அதை கைபேசி காமிராவில் படம்பிடித்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட மாணவனை இரு ஆண்டுகளுக்கு முன்பு செய்திகளில் நாம் வாசித்தோம். விடலைப் பருவத்தில் உடல் மாற்றத்திற்கேற்ப நடக்கும் உளவியல் வளர்க்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. உடலுழைப்பிலும், விளையாட்டிலும் அவர்களை ஈடுபடுத்துவது அன்பற்ற அரக்கத்தனமான செயலாக உணர்த்தப்பட்டுவிட்டது. தங்கள் வேலைகளில் அவர்களை பழக்குவதற்கு கூட பெற்றோர்கள் தயங்குகின்றனர்.

ஒரு டாக்டராக பொறியாளராக வழக்கறிஞராக ஏன் கலெக்டராத்தான் தனது பிள்ளையை பெற்றோர் உருமாற்ற நினைக்கின்றனர். நல்ல மனிதனாக இயற்கையோடு இசைந்து சமூகத்தோடு ஒட்டி உறவாடி வளரும் வண்ணம் அவர்களுக்கு வாய்ப்பளிப்பதில்லை. கோடை விடுமுறையில் கூட அவர்களை கணினிப் பயிற்சிக்கும் ஆங்கில படிப்புக்கும் அனுப்பி வருங்கால வருமானக் கருவிகளாக வடிவமைக்க நினைக்கிறார்கள். எதிர்கால இலட்சியங்களை இரண்டாம் நிலையாக்கி சுயநலமும் பிழைப்பு வாதமும் பிள்ளைகளின் குணநலன்களாக ஊட்டப்படுகின்றன.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இல்லை. இதனால் வீடியோ விளையாட்டுகளையே அவர்கள் பெரிதும் விரும்பும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். நவீன உணவு வகைகளான பீட்ஸா, பர்கர், சாக்லேட், ஐஸ்கிரீம் நொறுக்குத்தீனி வகைகள் அவர்கள் உடலை திடமற்றதாக்குவதோடு, அவற்றில் இருக்கும் சர்க்கரையும் உப்பும் கொழுப்பும் அவனது மூளையின் செயல்பாட்டையும் பாதிப்பதாக உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இன்றைய ஆங்கிலவழிக் கல்வி ஒரு மாணவனை தனது சமூக வாழ்க்கையிலிருந்து அந்நியப்படுத்துகிறது. தாய்மொழி பேசி இயங்கும் சுற்றத்தோடு அவனை ஒட்டவிடாமல் வெட்டிவிடுகிறது. நஞ்சை நாற்றுகளாக இல்லாமல் குரோட்டன்ஸ்களாய் மாற்றிவிடுகிறது. மொழி அறிவு இருக்கும் அளவு அவர்களுக்கு பொது அறிவோ சமூக உணர்வோ இருப்பதில்லை. அறிவுறுத்தி அன்பு செலுத்தி வளர்க்காத பெற்றோரும் அறம் சொல்லி தண்டித்து திருத்தாத சமூகமும் குழந்தைகளுக்கு முன்பு குற்றவாளிகளாக தலைகுனிய வேண்டியது கட்டாயம்.

மதிப்பெண் வாங்கும் பந்தயக்குதிரைகளாக பிள்ளைகளை பழக்கிவிட்டோம். விட்டு விடுதலையாகி சிட்டுக்குருவிகள் போல் சிறகடிக்கம் சுதந்திரத்தை கத்தரித்து. சர்க்கஸ் விலங்குகளாக அவர்களை குறுகிய வட்டத்தில் உலவச் செய்கிறோம். இதனால் பள்ளி தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பலர் தற்கொலை பாதையில் பயணிப்பதை தொடர்ந்து காணமுடிகிறது. தங்கள் கனவுகளை குழந்தைகள் மீது சுமத்துவதும், செருப்புக்கேற்ற காலை வெட்டுவது போல் அதற்கேற்ப அவர்கள் மனதை மாற்ற முயல்வதும் பல சமயங்களில் தவறாக முடிந்துவிடுகிறது.

வறுமையில் வளரும் சிறுவர்கள் மீது பெற்றோர் தனிப்பட்ட கவனம் செலுத்துவதில்லை. ஆனால் ஊடகங்கள் அவர்களின் எதிர்பார்ப்பை ஊதிப்பெருக்குகின்றன. விருப்பத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையேயான போராட்டம் அவர்களை வன்முறையாளர்களாக்கும் பயிற்சியாக மாறிவிடுகிறது. போட்டியில் முந்தாவிட்டால் வாழ்க்கையே அஸ்தமித்துவிடும் என அச்சுறுத்தும் போக்கும் மாணவர்கள் மனநிலையை அதிகம் பாதிக்கிறது. தேர்வில் தோற்றால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் எண்ணிக்கை 2011ல் 2381 என்பது அரசே அறிவித்த புள்ளி விபரம்.

கடந்த ஆட்சியின் மத்திய அமைச்சரவை சிறார் குற்றவாளிகளது குறைந்தபட்ச வயதுவரம்பு 18ல் இருந்து பதினாறாக குறைக்க ஒப்புக்கொண்டது. வயதை குறைப்பதால் வன்முறை மனநிலையை தவிர்க்க முடியாது. மேலை நாடுகள் பல சிறார் வயதுவரம்பை 18 ஆக நிர்ணயித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் பதினேழாகவும் அதன் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் பதினாறாகவும் இருக்கிறது. ஆனாலும் அங்கெல்லாம் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

வாழ்க்கைக்கும் மனநிலைக்கும் வாய்ப்புக்கும் அறிவு நிலைக்கும் இடையே உள்ள இடைவெளி சுருங்கும் போதுதான் சிறுவர் குற்றங்கள் குறுகத்தொடங்கும். அனைவருக்கும் ஒரே தரமான கல்வியை உறுதி செய்வது. கல்விக்கொள்ளையை ஒழிப்பது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வேரறுப்பது, நுகர்வு வெறியை கட்டுப்படுத்துவது ஆகியவற்றை செயல்படுத்தாமல் சிறார் குற்றவாளிகள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு முன்பாக நாமும் நிறைய பாடம் படிக்கவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *