முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக அரசு அதிகாரிகள் நியமனம், முக்கிய பதவிகளுக்கான பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு தகுதியான நபர்களை நியமித்து வருவதாக திமுக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
தலைமைச்செயலாளராக இறையன்பு, மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராக ஜெயரஞ்சன், டிஜிபியாக சைலேந்திர பாபு, பாடநூல் கழக தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி என அடுத்தடுத்து நியமனங்களை அறிவித்து வருகிறார். சமீபத்தில் தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற தலைவராக சாலமன் பாப்பையா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் பிரபல நடிகரும், திமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான வாகை சந்திர சேகர் தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகரான வாகை சந்திரசேகர் திமுகவின் மீது பற்று கொண்டவர், மேடை பேச்சாளராக வலம் வந்தவர். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி கண்டவர். தமிழ்நாடு இயல்,இசை நாடக மன்ற தலைவராக மட்டுமில்லாமல் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவராகவும் வாகை சந்திரசேகர் செயல்படுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.