• Tue. Apr 23rd, 2024

தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டியின் வறுமை கண்டு கண் கலங்கிய மாவட்ட ஆட்சியர் முரளிதரன்!..

Byadmin

Aug 7, 2021

தனது சொந்தப் பணத்தில் சேலை, போர்வைகள் வழங்கினார்.

தேனி மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள முரளிதரன்
தான் பொறுப்பேற்ற நாளிலிருந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அப்போது அந்த இடங்களில் உள்ள பொதுமக்கள், தூய்மைக்காவலர்கள் என்று அனைவருடனும் சகஜமாக சென்று உரையாடும் அவர் அனைவரின் வீடுகளுக்கும் சென்று அவரவர் பிரச்சனைகளைக் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறார். மாவட்ட ஆட்சியரின் இந்த யதார்த்தமான செயல் மாவட்ட மக்களால் பாராட்டப்படுகிறது.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நேற்று கம்பத்தில் உள்ள ஆதரவற்ற மூதாட்டியின் வீட்டிற்கு நேரடியாக சென்று மூதாட்டியின் ஏழ்மை நிலைகண்டு கண் கலங்கியதுடன் அவருக்கு தன் சொந்த பணத்தில் சேலை, போர்வைகள் வாங்கித் தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் என்பவரது மனைவி வீராயி அம்மாள். இவர் சுருளிப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள குடிசை வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் தனது குடிசைக்கு மின் இணைப்பு கேட்டு தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரனிடம் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று கம்பத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் திடீரென வீராயி அம்மாளின் வீட்டிற்கு நேரடியாகச் சென்றார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக வீராயி அம்மாள் அளித்த மனுவை விசாரிக்க சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், வீராயி அம்மாளின் ஏழ்மை நிலையை அறிந்து கண்கலங்கினார்.

மேலும் அந்த மூதாட்டி சாப்பாட்டிற்கு என்ன செய்கிறார்? முதியோர் உதவித்தொகை கிடைக்கிறதா என்று ஆவலுடன் விசாரித்த அவர், மூதாட்டியின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

மேலும் அவருக்கு தனது சொந்த பணத்தில் உடனடியாக இரண்டு போர்வைகள் மற்றும் சேலை வாங்கி தருமாறு உதவியாளர்களிடம் கூறிவிட்டு சென்றார்.பின்னர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உடனடியாக 2 போர்வைகள் மற்றும் சேலை வாங்கி வரப்பட்டு வீராயி அம்மாளிடம் அளிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *