

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ரவீந்திரநாத் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்தார்.
தேனி மக்களவை உறுப்பினராக ரவீந்திரநாத் திறம்பட செயலாற்றி வருகிறார். தேனி மக்களின் நீண்ட நாள் கனவான மதுரை – தேனி அகல ரயில் பாதை திட்டத்திற்காக மத்திய அமைச்சரவையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். கடந்த 2011ம் ஆண்டு, மதுரை – போடி இடையிலான 90.4 கிலோமீட்டர் ரயில் பாதையை, அகலரயில் பாதையாக மாற்றும் பணி துவங்கியது. கிட்டத்திட்ட 10 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த பணிகள், கடந்த 2 ஆண்டுகளாக வேகமெடுக்கத் துவங்கியது. முதல்கட்டமாக, மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரையிலான 37 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதைப் பணிகளும், இரண்டாம் கட்டமாக, உசிலம்பட்டி முதல் ஆண்டிபட்டி வரையிலான 21 கிலோமீட்டர் தூரம் ரயில்பாதைப் பணிகளும் முடிவடைந்து, சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற போதும், இதுவரை ரயில் சேவை தொடங்கப்படவில்லை. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மக்களுக்கு ரவீந்திரநாத் எம்.பி,. உறுதியளித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார்.
அந்த கோரிக்கை மனுவில், மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை திட்டத்தில் ரயில் சோதனை ஓட்டம் முடிவுற்ற மதுரை-தேனி வரையிலான பயணிகள் போக்குவரத்தினையும்,
சென்னை- தேனி இடையிலான விரைவு ரயில் சேவையையும் இணைந்து உடனடியாக தொடங்க வேண்டுமென தெரிவித்தார். தென் மாவட்ட மக்களின் 50 ஆண்டுக்கால கோரிக்கையான திண்டுக்கல்- தேனி- இடுக்கி மாவட்ட மக்களின் போக்குவரத்தை இணைக்கும் திண்டுக்கல்- கம்பம் லோயர் கேம்ப் அகல ரயில் பாதை திட்டத்தை தொடங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டார்.
இதனால் திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்ட மக்களின் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியும், சபரிமலை செல்லும் பக்தர்களின் போக்குவரத்து வசதியும், சரக்கு பொருட்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயண வசதியும் மேம்படுத்தப்படும் எனவும் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

