ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக மனு அளிப்பதற்காக நூற்றுக் கணக்கானோர் வர இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31ம் தேதிக்கு பின்னர் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க கூடாது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதையொட்டி இன்று அந்த அமைப்பை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், தூத்துக்குடி – திருநெல்வேலி பிரதான சாலையில் கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சியர் அலுவலக நுழைவு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், அலுவலக பிரதான வாயிலில் டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். ஆட்சியர் அலுவலத்திற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது..