• Tue. Jun 24th, 2025
WhatsAppImage2025-06-06at0431542
WhatsAppImage2025-06-06at04315413
WhatsAppImage2025-06-06at04315415
WhatsAppImage2025-06-06at04315412
WhatsAppImage2025-06-06at0431543
WhatsAppImage2025-06-06at0431548
WhatsAppImage2025-06-06at0431547
WhatsAppImage2025-06-06at04315410
WhatsAppImage2025-06-06at0431549
WhatsAppImage2025-06-06at04315411
WhatsAppImage2025-06-06at0431545
WhatsAppImage2025-06-06at04315414
WhatsAppImage2025-06-06at0431544
WhatsAppImage2025-06-06at0431546
previous arrow
next arrow

திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் அமைத்துக் கொள்வதால், தயாரிப்பாளர்களுக்கு பெருத்த நஷ்டம். சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி!…

Byகுமார்

Aug 7, 2021

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர்சுப்பிரமணி வலைத்தள சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த போது தமிழ்த் திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தற்போதைய சினிமா நிலவரம்பற்றி தெரியவில்லை. நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள் தற்போது படங்கள் தயாரிக்காததால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார். தேர்தல் மூலம் வெற்றிபெற்று பொறுப்புக்கு வந்தவர்கள் பற்றி தொடர்ந்து திருப்பூர் சுப்பிரமணி அவதூறாக பேசி வருவது பற்றி விவாதிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கஉறுப்பினர்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை(30.07.2021)சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் சம்பந்தமாக அதிகாரபூர்வமாக செய்திகுறிப்பை சங்கத்தின் சார்பில் இன்றுவரை வெளியிடப்படவில்லை .

இதுசம்பந்தமாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் இராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, திரையரங்குகள் சம்பந்தமாக ஐந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது  என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். உள்ளக்குமுறல் களுடன் அவருடைய பதில்கள் வருமாறு.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் தற்போதைய நிலைமை?

சினிமா தயாரிப்பு தொழில் கடந்த பத்தாண்டுகளாகவே கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.குறிப்பிட்ட சில நடிகர்களின் படங்கள் கோடிக்கணக்கில் வசூல் என்று செய்திகள் வருகிறது. அப்படத்தின் வருவாயில் பெரும்பகுதி நடிகர்கள் சம்பளமாக கொடுக்கப்பட்டு விடுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் வருவாய் லாபகரமாக இல்லை.

தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் அவசரகூட்டம் எதற்காக ?என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன?

திரையரங்குகளில் நுழைவுச்சீட்டு விற்பனை முழுக்க கணினி மயமாக்கப்பட்டு வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும், இணையத்தில் நுழைவுச்சீட்டு பதிவு செய்யும்போது கிடைக்கிற சேவைத் தொகையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு வேண்டும், திரைப்படங்களுக்கு இடைவெளியில் போடப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு, க்யூப்,UFO போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு விஎஃப்எஃப் எனப்படும் ஒளிபரப்புக்கருவிக்கான கட்டணம் கட்டமாட்டோம்,திரையரங்கு உரிமையாளர்கள் சிண்டிகேட் எனப்படும் மறைமுகக்கூட்டணி வைக்கக்கூடாது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் போட்டுள்ளோம்.

இவைஅனைத்தும் ஏற்கனவே போடப்பட்ட தீர்மானங்கள்தாமே?

ஆம், விஷால் தலைமையிலான சங்கம் வேலைநிறுத்தம் அறிவித்தபோது இவை பேசப்பட்டன. தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கம் ஆகிய முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் தயாரிப்பாளர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டு திரையரங்கு உரிமையாளர்களும் ஏற்றுக்கொண்டவைதான் இவை.

அதன்பின் என்ன நடந்தது?

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, கடம்பூர் ராஜு,கே.சி.வீரமணி ஆகிய அமைச்சர்கள் முன்னிலையில் இந்த விசயங்கள் பேசப்பட்டன. ஆனால், அவை நடைமுறைக்கு வரவேயில்லை. அமைச்சர்களும் கண்டுகொள்ளவில்லை. எனவே, இப்போதைய முதலமைச்சர் எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மையோடு நடக்கிறார். அதேபோல இந்தத் துறையிலும் எல்லா இடங்களிலும் குறிப்பாக திரையரங்குகளில் வெளிப்படைத்தன்மை இருக்க அரசாங்கம் ஆவனசெய்யவேண்டும் என்றுகோருகிறோம்.

ஒரு துறையில் ஏற்படும் சிக்கலை அரசாங்கம் தீர்த்துவைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது சரியா?

திரையரங்குகளில் விற்கப்படும் நுழைவுச்சீட்டுகளின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு வரி வருவாய் கிடைக்கிறது. ஆனால் இவர்கள் முறையான கணக்கு கொடுக்காததால் ஆண்டுக்கு குறைந்தபட்சம் நானூறு கோடியிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் கோடிவரை அரசாங்கத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்த வருவாய் சரியான முறையில் அரசாங்கத்துக்குப் போய்ச்சேர்ந்தால், சின்ன பட்ஜெட் படங்களுக்கு மானியம் உள்ளிட்ட பல சலுகைகளை உரிமையுடன் கேட்டுப் பெற முடியும். எனவே எங்கள் கோரிக்கையை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்கவில்லையென்றால் அரசாங்கத்திடம் முறையிடவுள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் கணினிமயமாக்கப்பட்டுள்ளது என திருப்பூர் சுப்பிரமணியம் கூறிவருகிறாரே?

நீண்டகாலமாக அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றார். களநிலவரம் அப்படி இல்லை. தனியார் நிறுவனங்கள் மூலம் திரையரங்குகள் கணினிமயமாக்கப்பட்டு முன்பதிவு மூலம் சேவைக் கட்டணம் என்கிற பெயரில் ஒரு நுழைவுச் சீட்டுக்கு 30 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் தயாரிப்பாளர்களுக்கு எந்தப் பலனும் இல்லை, என்பதுடன் டிக்கட் விற்பனையில் வெளிப்படை தன்மையும், உண்மையான தகவல்களும் இல்லை.

படம்தயாரிக்காதவர்கள் சங்க நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பதால் தவறான தகவல்களைக் கூறுகின்றனர் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியுள்ளாரே?

தவறான கருத்து. படம் தயாரித்தவர்கள்தான் சங்க நிர்வாகப் பதவிகளுக்கு போட்டியிடவும், தேர்தலில் வாக்களிக்கவும்முடியும்.எங்கள் சங்கத் தலைவர், செயலாளர் உட்பட பெரும்பாலோனோர் இப்போதும் படம் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
பெரும்பான்மையான உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்களை அவமானப்படுத்தும் நோக்கில், திருப்பூர் சுப்பிரமணியம் தொடர்ந்து அவதூறு கருத்துகளைக் கூறிவருகின்றார். திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற முடியாது என்பதால் பாரம்பரியம் மிக்க சங்கத்தை முடக்கிவிட்டு அதிமுக அமைச்சர்கள் ஆதரவுடன் தனி சங்கம் தொடங்கி தலைவரானவர் திருப்பூர் சுப்பிரமணியம். இதுவரை அந்தச் சங்கத்திற்கு முறைப்படி தேர்தல் நடைபெற்றதில்லை. நியமன தலைவர் முறைப்படி நடைபெற்ற தேர்தல் மூலம் வெற்றி பெற்ற எங்களைப் பற்றிப் பேசுவதற்குத் தார்மீக உரிமை இல்லை.

தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்றாகப் பிரிந்திருப்பதால் மற்ற சங்கங்களுடன் திரையரங்கு உரிமையாளர்கள் ஒப்பந்தம் போட்டால் என்ன செய்வீர்கள்?

நாங்கள் எல்லாத் தயாரிப்பாளர்களுக்காகவும்தான் பேசுகிறோம். சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படாமல் செயல்படுகிறவர்கள் மீது முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

நடப்புதயாரிப்பாளர்கள் சங்கம் உட்பட எல்லோரையும் ஒருங்கிணைப்போம் என்று தேர்தல் நேரத்தில் சொன்னீர்களே?

நாங்கள் ஒன்றாகிவிடக்கூடாது என்பதற்காக சில தீயசக்திகள் வேலை பார்க்கின்றன. அவற்றைத் தாண்டி நல்லது நடக்கும்.

நடப்பு தயாரிப்பாளர்கள்சங்கம், தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியனவற்றுக்கு தணிக்கைச்சான்றுக்கான பரிந்துரைக்கடிதம் கொடுக்கும் அங்கீகாரத்தை அரசாங்கமே வழங்கியுள்ளதே. இனிமேல் உங்களுடன் இணையவேண்டிய தேவை என்ன?

ஏழுபேர் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்தால் அதற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துவிடும்,இது ஒரு படத்தைத் தயாரித்த பின் தணிக்கைக்குப் போகும் நேரத்தில் செய்யவேண்டிய விசயம் இது. ஆனால் ஒரு படத்தை உருவாக்குவதற்குப் பல விசயங்கள் தேவை

திரையரங்குகள் தனிநபர்கள் கட்டுப்பாட்டில் என்கிற உங்கள் குற்றசாட்டு பற்றி…..?

தயாரிப்பாளர்கள் தொடர்நஷ்டத்தை சந்தித்து வருவதற்கு திரையரங்குகள் தனி நபர் கட்டுப்பாட்டில், சிண்டிகேட் அமைப்பு உருவாக்கப்பட்டதும் ஒரு காரணம் .முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்கள் அவுட்ரேட் முறையில் முதலிலேயே விற்பனை செய்யப்பட்டுவிடுகிறது. சிறு முதலீட்டு படங்களை தயாரிப்பாளர்கள், மொத்த செலவையும் செய்து வெளியிடுகின்றனர். இதற்கு விநியோகஸ்தர்கள், திரையரங்குகள் முன்பணம் கூட கொடுப்பது இல்லை .நல்ல திரையரங்குகளை ஒதுக்கீடு செய்வதும் இல்லை .அவர்கள் ஒதுக்கீடு செய்யும் தியேட்டர்களில் படங்களை வெளியிட வேண்டி உள்ளது அதனால்தான் படங்களின் இடையே வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் தயாரிப்பாளர்களுக்கு பங்குதர வேண்டும் என கேட்கிறோம்.

தொழிலாளர்கள் சங்கமும் அந்த அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாகச் சொல்லப்படுகிறதே.?

திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் சம்பளம் மற்றும் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தங்கள் எங்கள் சங்கம்தான் போட்டுவருகிறது. வருங்காலத்திலும் அதுவே தொடரும் என்றார்.