

அரியலூர் – ஜெயங்கொண்டம் பகுதியில் திடீரென பெய்த கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமம் வடக்கு தெருவில் மாலை வேளையில் திடீரென பெய்த சுமார் அரை மணி நேரத்திற்கு மேற்பட்ட மழையால் தெருக்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து வீடுகளுக்குள் புகுந்தது.
சரியான முறையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீரானதுவெளியே செல்ல முடியாமல் தேங்கி கிடந்தது. மேலும் இந்த தண்ணீரானது அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் பகுதியில் தண்ணீர் தேங்கி வருவதாகவும், இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை சரியான முறையில் நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் வடிகால் வசதி செய்து தரவேண்டும் என்பது இந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
