தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுடைய மாப்பிள்ளை சபரீசன், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை ஒட்டி சமூக தளங்களிலும் நேரிலும் திமுகவினர் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
திமுக கடந்த சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்ட நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் தொடங்கி வேட்பாளர் தேர்வு, கட்சியின் தேர்தல் நிதி என முக்கியமான விவாரங்களை கவனித்துக்கொண்டவர் சபரீசன். வேட்பாளர் தேர்விலும் கூட ஐபேக் நிறுவனத்தோடு இணைந்து சபரீசனின் பணி முக்கியமாக இருந்தது. இதன் காரணமாகவே சபரீசன் வீட்டைக் குறிவைத்து தேர்தலுக்கு முன் வருமான வரி ரெய்டுகளும் நடந்தன.
திமுக ஆளுங்கட்சியாக வந்துவிட்ட நிலையில் சபரீசனின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்தது. எந்த அளவுக்கு என்றால், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, அவர் பின்னே சபரீசனை நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிடும் அளவுக்கு சபரீசன் திமுகவின் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கியமானவர் ஆனார்.
இன்று அவரது பிறந்தநாளை ஒட்டி காலையே முதல்வரிடம் வாழ்த்துகளைப் பெற்றார் ஸ்டாலின். அதைத் தொடர்ந்து பல அமைச்சர்கள் சபரீசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.தலைமைச் செயலகத்தின் முக்கியமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் சபரீசனுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். சிலருடைய வாழ்த்தின்போது புகைப்படம் வேண்டாம் என்று சபரீசனே தவிர்த்துவிட்டார்.
ஆயினும் மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள் பலர் சபரீசனை நேரில் சந்தித்து வாழ்த்தி அவர்களில் சிலர் அதை சமூகதளங்களிலும் பகிர்ந்து வருகிறார்கள்.
கலைஞருக்கு ஒரு முரசொலி மாறன் ஸ்டாலினுக்கு ஒரு சபரீசன் என்ற பாராட்டுமொழிகளோடு சமூக தளங்களில் திமுகவினர் சபரீசனுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள்