

இந்த தித்திக்கும் தேனி மாவட்டத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் விதமாக தமிழக அரசு, தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசு அருங்காட்சியகம் ஒன்றை அமைத்துள்ளது.
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தேனி மாவட்ட வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் இயற்கை, அரசியல், சமூகம் ,கலை இலக்கியம், பண்பாடு, பொருளாதாரம் இவற்றை விளக்கும் விதமாக இரண்டு மாடிகளைக் கொண்ட கண்காட்சியகம் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பூமியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான வரலாற்றுச் சான்றாக உள்ள கல்வெட்டு அமைந்துள்ளது. இந்திய வரலாற்றிலேயே தமிழ் எழுத்தில் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாக வடிவமைக்கப்பட்ட மிக உன்னத படைப்பாக இது உள்ளது. V மேலும் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழக மக்களின் வாழ்க்கை ,வீரம் போன்றவற்றை விளக்கும் விதமாக உள்ள நடுகல்லும், தஞ்சை மன்னர்கள், மருது சகோதரர்கள் பயன்படுத்திய போர் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல கோடி ஆண்டுகளாக வாழ்ந்த உயிரினங்கள், செடி, கொடி ,விலங்குகள் ஆகியவற்றின் பாசில் ,படிமங்கள் ஆகியவற்றை தேனி மாவட்ட கனிமவள துறையின் மூலம் பெறப்பட்ட காட்சியாக வைக்கப்பட்டு உள்ளது, தேனி மாவட்டத்தில் விளையும் காய்கறிகள் ஏலம் , காபி தேயிலை உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் குறித்த விவரங்களும், மேகமலை வனச்சரகத்தில் உள்ள உயிரினங்களின் பதம் செய்யப்பட்ட எலும்புகள், முதுமக்கள் தாழி, அக்கால, இக்கால இசைக்கருவிகள் தேசிய அளவில் நம் மாவட்டத்தை பறைசாற்றும் விதமாக பல அற்புத படைப்புகள் இங்கே இடம் பெற்றிருக்கிறது.
இந்த அருங்காட்சியகம் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை ,மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்கள் தவிர்த்து அனைத்து நாட்களும் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ஐந்து ரூபாயும், சிறியவர்களுக்கு மூன்று ரூபாயும் ,பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாகவும், அனுமதி வழங்கப்படுகிறது, வெளிநாட்டவர், வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு நூறு ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது .தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் இந்த அருங்காட்சியகம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும், கரொனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட காரணத்தினால் வெளியுலகுக்கு அதிகம் தெரியாமல் போனது துரதிஷ்டவசமாக உள்ளது. எனவே கல்வி துறை ,மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை அருங்காட்சியகத்தின் மேன்மையை உலகிற்கு பறைசாற்ற வேண்டும் என்று இந்த கட்டுரை வாயிலாக தெரிவிக்கப்படுகிறது.

