திருப்பத்தூர் அருகே தடையை மீறி மஞ்சுவிரட்டு
300 காளைகள் பங்கேற்பு -10 க்கும் மேற்பட்டோர் காயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் 300 -க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்
திருப்பத்தூர் அருகே புகழ்பெற்ற பெரிச்சிகோயில் உள்ளது. இங்கு ஒற்றை சனீஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத கடைசி இரு நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டும் இந்தாண்டும் திருவிழா நடைபெறவில்லை. மேலும் கோயில் திருவிழாவின் போது ஒவ்வொரு ஆண்டும் மஞ்சுவிரட்டு நடத்துவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு உத்தரவால் மஞ்சுவிரட்டு நடக்கவில்லை. காவல்துறையினர் ஊர் பெரியவர்களிடம் மஞ்சு விரட்டு நடத்த தடை உள்ளது என கூறிய நிலையில் இளைஞர்கள் இணைய வழி மூலம் இன்று மஞ்சுவிரட்டு நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதையறிந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் ஏராளமான மஞ்சுவிரட்டு காளைகள் அழைத்து வரப்பட்டன. இந்த மஞ்சுவிரட்டில் சுமார் 300 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. மேலும் காளைகள் முட்டியதில் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மஞ்சுவிரட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்தவர்களை காவல்துறை தடுத்தாலும் வேறு வழிகளில் சென்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு தடையை மீறி மஞ்சுவிரட்டு நடந்ததை அடுத்து திருக்கோஷ்டியூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.