• Fri. Apr 18th, 2025

சென்னையில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது 2021 வழங்கும் விழா…

Byadmin

Aug 2, 2021

நெல்லையை சேர்ந்த டாக்டர் அன்புராஜனுக்கு விருது வழங்கப்பட்டது

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அரசு மற்றும் தனியார் மருத்துவ துறையில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விருது அளித்து கௌரவிப்பது வழக்கம்

தற்போது கொரோனா பெருந்தொற்றின் போது தன்னலம் கருதாது தியாக மனதோடு சிறப்பாக பணியாற்றி மக்களுடைய உயிரை காப்பாற்றுவதற்கு உதவியாக இருந்த அரசுத்துறை மருத்துவர்களுக்கும் தனியார் மருத்துவர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் விருது 2021 என்ற விருதை வழங்கி கௌரவித்தது. கடந்த 29-7-2021 அன்று சென்னை ஐடிசி சோழா ஹோட்டலில் ராஜேந்திரா ஹாலில் வைத்து நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழகத்தின் கவர்னர் மேதகு பன்வாரிலால் புரோகித் தலைமை ஏற்று சிறப்பு விருதுகளை மருத்துவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே செந்தில், பதிவாளர் ஆறுமுகம் மற்றும் பிற கவுன்சில் உறுப்பினர்களும் விருது பெற்ற மருத்துவர்களை கௌரவித்தார்கள். இந்திய மருத்துவ கழகத்தை சார்ந்த தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது. அவர்களில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் இரா. அன்புராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காலத்தில் தனியார் மருத்துவ சேவைகளை திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.மேலும் இந்நிகழ்ச்சியில் இந்திய மருத்துவ கழக தமிழ்நாடு கிளையின் செயலாளர் டாக்டர் ஏ கே ரவிக்குமார், நாகர்கோவில் சேர்ந்த டாக்டர் திரவிய மோகன், புதுக்கோட்டையை சேர்ந்த டாக்டர் சலீம் மற்றும் டாக்டர் பூபதி ஜான் ஆகியோருக்கும் இந்த விருதுகள் வழங்கப்பட்டது.

இது தவிர தமிழ்நாடு அரசு மருத்துவ துறையை சார்ந்த அதிகாரிகள், மருத்துவர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள், பொது சுகாதாரத் துறையை சார்ந்த மாவட்ட மற்றும் மாநில மருத்துவ அதிகாரிகள், தமிழ்நாடு கொரோனா பாதுகாப்பு வழிகாட்டும் குழு மருத்துவர்கள் ஆகியோர் சிறப்பாக பணியாற்றியமைக்காக சுமார் 30 பேருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டது.