• Wed. Feb 19th, 2025

சத்ரபதி சிவாஜிக்கு அரசியலில் முன்னோடியாக விளங்கிய ராஜேந்திர சோழனின் பெருமை மறைக்கப்படுகிறதா?…

By

Aug 7, 2021

கங்கைகொண்ட சோழபுரம் என்ற ஊரை உருவாக்கி ,கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கச் செய்து, இந்த கண்டத்தின் அமைதியையும் (போரையும் அந்த ஊர் தான் முடிவு செய்யும் என்ற அளவிற்கு கட்டிக்காத்த, தமிழ் மன்னன், பேரரசன் ராஜேந்திர சோழன் பெருமை பேசுகிறது இக்கட்டுரை.

 ஐப்பசி சதயம் ராஜராஜ சோழனுக்கு என்றால் ஆடி திருவாதிரை ராஜேந்திரனுக்கானது.

தமிழக மன்னர்களில் மிக பெரிய வரலாறு அவனுக்கு உண்டு, உலகில் தோல்வியே பெறாத அரசர்களில் ராஜராஜனை போல அவனுக்கு பெரும் இடம் உண்டு.

ராஜராஜசோழன் மிகபெரிய மன்னன், தோல்வியே பெறாமல் சோழ சாம்ராஜ்யத்தை மிக பெரிதாக உருவாக்கியிருந்தான் சந்தேகமில்லை.

ஆனால் அவன் அந்திமகாலங்களில் அவன் சிவனடியார் கோலத்துக்கு மாறியிருந்தான், சந்தேகமில்லை. அவனும் நாயன்மார்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவன். சுந்தரர் பின்னாளில் வந்திருந்தால் நிச்சயம் ராஜராஜ சோழனை நாயன்மாராக்கியிருப்பார்.

அவனின் சிவபக்தி அப்படி இருந்தது, தமிழகத்தின் மற்ற பிரமாண்ட ஆலயமெல்லாம் சிறிதாக இருந்து மெல்ல மெல்ல விரிவுபடுத்தபட்டவை ,ஆனால் தஞ்சை பெரியகோவில் ஒன்றுதான் ஒரே மன்னனால் பிரமாண்டமாக கட்டபட்ட ஆலயம்.

சிவனுக்காக தன் முழு சக்தியும் செலவளித்து ராஜராஜன் அந்த கோவிலை கட்டினான், அவனின் ஆட்சி முடியும் பொழுது ஒரு சிவதேசமாக சோழ தேசம் மிளிர்ந்தது.

ராஜராஜன் சன்னியாசியாகி இறந்துவிட்டான், அவன் மகனோ அவன் அளவு இல்லை, இனி அங்கு படையெடுப்பது எளிது அல்லது சோழர் பிடியில் இருந்து மீள்வது எளிது என ஒவ்வொரு நாடும் மெல்ல துளிர்த்த காலமது.

ஆனால் தந்தை 6 அடி என்றால் மகன் 18 அடி பாய்ந்தான்.

அவனின் மிகசிறந்த மதிநுட்பம் தஞ்சையில் இருந்து தலைநகரை கங்கை கொண்ட சோழபுரம் எனும் ஊருக்கு மாற்றியது.

ஆம், அது தலைநகராக இருக்கும் பட்சத்தில் ஒருவேளை எதிரிகள் வென்றால் அந்நகரை தீக்கு இரையாக்கிவிடுவர், தன் தந்தை உருவாக்கிய சிவ அடையாளத்துக்கு எந்த நெருக்கடியும் ,ஆபத்தும் வர கூடாது என வடக்கே ஒரு நகரை உருவாக்கி அங்கே வசித்தான்.

ராஜராஜன் கொடுத்த அஸ்திபாரத்தில் மிக பெரிய சோழ பேரரசை எழுப்பினான் ராஜேந்திரன்.

ஆம் ராஜராஜனை விட பலமடங்கு வெற்றிகளை குவித்தவன் ராஜேந்திரன். ராஜராஜனின் அரசு தஞ்சையிலும் , பாண்டிய நாட்டிலும் கொஞ்சம் சாளுக்கியத்திலும் ஈழத்திலுமே இருந்தது, அதை கலிங்கம், சாளுக்கியம் ,வங்கம் கடல்தாண்டி கடாராம், கம்போடியா வியட்நாம், சுமத்ரா என எங்கெல்லாமோ விரிவாக்கி வைத்திருந்தான் ராஜராஜன்.

நிச்சயம் சரித்திரத்தின் சீசருக்கும், செங்கிஸ்கானுக்கும் இணையான அரசன் அவன். இன்னொரு இனத்தில் பிறந்திருந்தால் கொண்டாடி தீர்த்திருப்பார்கள் ஆனால் தமிழினத்தில் பிறந்ததால் மறைக்கபட்டான்.

அக்கால தமிழினம் அவனை கொண்டாடி தீர்த்தது, ராஜேந்திரன் எனும் அப்பெயர் இன்றும் தமிழ்நாட்டில் சூட்டபடும் அளவு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் அவனை பெருமையாய் எண்ணிற்று.

ஆம் இன்றும் “ராஜேந்திர” எனும் பெயர் தமிழகத்தில் விஷேஷம், அந்த அளவு ஆயிரம் ஆண்டு தாண்டியும் அவன் புகழ் இங்கு நிற்கின்றது.

அவன் தஞ்சை போலவே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கி மாபெரும் ஆலயத்தை கட்டினான், காவேரிக்கு இப்பக்கம் தகப்பன் கட்டியது போல, காவேரிக்கு அப்பக்கம் அதை கட்டி சிவ பக்தியின் உச்சத்தில் நின்றான்.

தகப்பனை போலவே ராஜேந்திரனின் இந்து ஆலயபணி சால சிறந்தது, அவன் கட்டிய கோவில்கள் ஏராளம். குறிப்பாக திருகாளத்தி எனும் தலத்தின் பெரும் கோவில் அவனால் கட்டபட்டது, அது தகப்பன் ராஜ ராஜன் புகட்டிய கண்ணப்ப நாயனாரின் பக்தியால் வந்தது.

ரஜேந்திரனுக்கு சண்டீஸ்வரர் மேல் பக்தி அதிகம், சண்டீஸ்வரரின் பக்தியின் உச்சத்தால் அவன் என்ன சொன்னாலும் சிவன் சந்தேகபடாமல் நம்புவார் எனும் அளவு சண்டீஸ்வரரின் பக்திமிக்க வாழ்வு ஏக பிரசித்தம்,
ஆம் ,அதை போலவே தானும் நிற்க வேண்டும் என அவரை வழிகாட்டியாக கொண்டு ஆலயபணி செய்தான் ராஜேந்திரன்.

பிலிப்புக்கு பின் அலெக்ஸாண்டர் மாபெரும் சாம்ராஜ்யம் அமைத்தது போல், செங்கிஸ்கானுக்கு பின்னால் குப்ளேகான் உலகை மிரட்டியது போல் பெரும் வரலாறு கொண்டவன் ராஜேந்திரன்.

வீர சிவாஜியின் இந்து மத காவல் சாயலும் அவனிடம் இருந்தது, சிவாஜிக்கு அரசியலில் ராஜேந்திரனே முன்னோடி.

அவன் காலத்தில் கங்கை கொண்ட சோழபுரம் கிழக்கு ஆசியாவின் தலைநகராய் விளங்கிற்று, இந்த கண்டத்தின் அமைதியும் போரையும் அந்த ஊர்தான் முடிவு செய்தது.

வட இந்தியாவில் ஊடுருவிய ஆப்கானியர் கூட தென்னகம் வர அஞ்சினர், ராஜேந்திரன் எனும் பெயர் அவர்களுக்கு மிக பெரிய அச்சுறுத்தலாக இருந்தது.

இதுபற்றிய கல்வெட்டும், படமும் ,சுதை சிற்பமும் ஏராளம் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தன, பின் வெள்ளையன் ,காவேரி கரையினை பலபடுத்த கல் வேண்டி அவற்றை அடித்து உடைத்து காவேரி கரைகளில் படியாகவும் ஆற்றுக்கல்லாகவும் புதைத்தான்.

ராஜேந்திரனின் மிகபெரும் வாழ்வின் ஆணவம் காவேரிகரை படிகளாக அலைகல்லாக மாறிவிட்டது வரலாற்று சோகம்.

இடையில் வந்த தெலுங்கர் இங்கு வரலாறு தொடர்பை துண்டித்ததும், பின் வந்த வெள்ளையர் அதை இன்னும் அழித்ததும் தமிழ்நாட்டின் இருண்ட காலங்கள்.

தமிழனை ஒழிக்க ஆலயங்களை குறிவைத்தான் வெள்ளையன். திருசெந்தூர் ஆலயம் முதல் தஞ்சை ஆலயம் வரை வெள்ளையனின் ஆயுத குடோன்களாக இருந்த காலமும் உண்டு, அப்படி பாழ்பட்ட நிலையில்தான் சோழபுரம் ஆலயமும் சிதைவுற்றது.

ஆனாலும் தீகுச்சியில் ஒரு குச்சி விளக்கேற்றும் என்பது போல எஞ்சியிருக்கும் கல்வெட்டுக்களே ராஜேந்திரனின் வரலாற்றை நமக்கு சொல்கின்றன‌.

அதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும், அவனின் வரலாற்றை மீட்டெடுத்தால் தமிழ்நாட்டில் இருந்த மாபெரும் இந்துமத பெருமையும் ஆளுமையும் வெளிவரும்

சோழபுரத்தின் லிங்கம் போன்ற மிகபெரிய வரலாறு அது, இங்கு அது மறைக்கபட்டது

புலித்தேவன், கட்டபொம்மனெல்லாம் கொண்டாடபடவேண்டியவர்கள், சந்தேகமில்லை. ஆனால் மாமன்னன் ராஜேந்திர சோழன் போற்றி வணங்கபடவேண்டியவன், தமிழனின் பெருமையும் இந்துமத அருமையும் அவனோடு தூங்கி கொண்டிருக்கின்றன‌.

அவனை மீட்டெடுத்து முன்னிலைபடுத்தல் வேண்டும்

ஆடி திருவாதிரைக்கு அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் , ஆடி அமாவாசையன்று தமிழகத்தின் தனிபெரும் சக்கரவர்த்திக்கு தர்ப்பணம் கொடுத்து நினைவு கூறல் வேண்டும்.

ஆம் அவசியம் செய்தாக வேண்டும், அவன் மீண்டெழுந்தால் இந்துமதம் தானாய் மீண்டெழும்

ராஜேந்திர சோழனின் மாபெரும் சாம்ராஜ்யம் சரிந்தபொழுது மின்னலாக எழும்பி அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை அப்படியே உருவாக்கினான் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன்

பாண்டிய நாட்டு சுந்தர பாண்டிய சோழனின் மிகபெரும் ஆலய பணிகள் கொஞ்சமல்ல‌
ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் கொஞ்சமும் குறையாத சமயபணி அவனுடையது.

இங்கு தேடி மீட்டெடுக்கவேண்டிய விளக்குகள் ஏராளம், அதை மீட்டெடுத்து ஜோதி ஏற்றினாலே போதும், காரிருள் விலகும்

நாம் இனி அதைத்தான் செய்ய வேண்டும், நிச்சயம் செய்தாக வேண்டும்

அதை ராஜேந்திர சோழனை தொழுதுவிட்டு தொடங்கலாம், தமிழ் இந்து பேரசசனாய் சிவபக்தனாய் ஆசியாவினை ஆட்டி வைத்து இந்துமத காவலனாய் நின்ற அவனை தொழுது நிற்போம்

அவன் தமிழ் இந்து, சிவனை வணங்கி நின்ற தமிழினத்தின் தலைகமன். வேதங்களையும் அவற்றின் அடிநாதங்களையும் காத்து நின்ற பெருமகன்.

ஆம் அவன் ஒரு கல்வெட்டில் இப்படி சொல்கின்றான் “காலவோட்டத்தில் இந்துமதமும் இவ்வாலயமும் பழுதுபடுமாயின் அதை மீட்டெடுக்க உதவுபவர்களின் காலில் விழுந்து நான் வணங்குகின்றேன்”
எவ்வளவு பக்தியும் உருக்கமும் இருந்தால் ஒரு சக்கரவர்த்தி இப்படி எழுதியிருப்பான்?

அவன் நம்காலில் விழவேண்டியது அல்ல, அரூபியாய் அவன் நம்மை வாழ்த்தும்படி வரலாற்றை தோண்டியெடுத்து விளக்கேற்றுவோம்.

சிவபெருமான் நம் எல்லோரையும் வழிநடத்துவார், ராஜராஜனுக்கு கொடுத்த வாய்ப்பினை நம் ஒவ்வொருவருக்கும் தருவார். அதில் தர்மத்தை மீட்டெடுத்து ஓளியேற்றுவோம்

மேல் நாட்டில் அலெக்ஸாண்டரை போல, ஜூலியஸ் சீசரை போல ஏன் மராட்டியத்தில் வீர சிவாஜி போல மிக பெரிதாக கொண்டாட வேண்டியவன் ராஜேந்திர சோழன்.