

என்.சங்கரய்யா 100 .-வது பிறந்தநாள்.
வாழும் வரலாற்றுக்கு வாழ்த்து மழை. கோவை எம். பி. நடராஜன் பங்கேற்பு.
சுதந்திரபோராட்ட வீரர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கோவையில் எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.
இந்திய வரலாற்றில் நூறாண்டு பிறந்தநாள் கண்ட மூத்த அரசியல் தலைவராக என்.சங்கரய்யா திகழ்கிறார். வெள்ளையன் ஆட்சியிலும், சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ கொடூரத்திற்கு எதிரான கிளர்ச்சியிலும் என 8 ஆண்டுகள் சிறை மற்றும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டவர். மனித குல விடுதலைக்கான மார்க்சிஸின் தத்துவத்தை உழைக்கும் மக்களுக்கு தனது கம்பீர குரலில் எடுத்துரைத்தவர். மார்க்சிஸ்ட் கட்சியை தோற்றுவித்த 32 பேரில் ஒருவரான கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா. வாழும் வரலாறாக திகழும் தோழர் என்.சங்கரய்யாவிற்கு ஜூலை 15 நூறாவது பிறந்தநாள். இதனையடுத்து தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி தோழர். என்.சங்கரய்யா பிறந்த நாளை இந்த ஆண்டு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடுவது கட்சியின் மாநிலக்குழு அறிவித்திருந்தது. இதன்ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற விழாவிற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் முன்னிலை வகித்தார். முன்னதாக தோழர் என்.சங்கரய்யாவின் பெயரில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் போராடிப்பெற்ற தேசத்தை பாதுகாப்போம், பாசிசவாதிகளை விரட்டியடிப்போம், தேச ஒற்றுமையை பாதுகாப்போம், தமிழ்மொழியின் மேன்மை அதன் இலக்கியங்களை தமிழ்பரப்பிற்கு விரிவாக எடுத்துச்செல்வோம், உழைக்கும் மக்களை அணிதிரட்டி சோசலிச உலகை கட்டியமைப்போம் என்கிற உறுதிமொழியை ஏற்றனர். இதனையடுத்து தோழர் என்.சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா ஆகியோர் பிறந்தநாள் கேக்கை வெட்டி சிறுவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஊட்டி விட்டனர். இதில் ஏராளமானோர் பங்கேற்று தோழர் என்.சங்கரய்யாவின் 100 ஆவது பிறந்தநாள் விழா எழுச்சி முழக்கத்தோடு கொண்டாடினர். இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைத்தொழிலார்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு புத்தாடை வழங்குவது, உணவுகள் வழங்குவது என தொடர்ந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
