• Wed. Apr 24th, 2024

இந்த மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்க போகுது….

Byadmin

Jul 24, 2021
Rain

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை நீலகிரி உட்பட 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சற்று முன்பு வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ‘‘தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.
எஞ்சிய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். குறிப்பாக கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், ஏனைய மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.
வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும். அதேபோல வரும் 27ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையும் நிலவக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். வங்கக் கடல் பகுதிகளில் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்” என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *