• Fri. Apr 19th, 2024

பப்ஜி விளையாடியதை கண்டித்ததால், மாணவன் தற்கொலை!…

Byadmin

Aug 5, 2021

ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல், செல்போனில் பப்ஜி விளையாடியதை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கும்பகோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிசநல்லூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் பார்த்திபன் (15). கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். கொரோனா பரவல் காரணமாக செல்போனில் ஆன்லைன் மூலம் படித்து வருகிறார்.

இந்நிலையில் தினமும் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்காமல் பார்த்திபன் செல்போனில் பப்ஜி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று ஆன்லைன் வகுப்பை புறக்கணித்து விட்டு செல்போனில் கேம் விளையாடியதால் ஆத்திரமடைந்த அவரது தாய் பார்த்திபனை திட்டி அவனிடமிருந்து செல்போனை வாங்கி வைத்துக் கொண்டார்.

இதனால் மனமுடைந்த பார்த்திபன் தாயிடம் நான் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்யப் போகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். இதனை விளையாட்டாக எடுத்துக் கொண்ட அவனது தாய் எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் வீட்டில் இருந்துள்ளார். ஆனால் பல மணி நேரமாகியும் பார்த்திபன் வீட்டுக்கு வராததால் பதட்டமடைந்த அவனது தாய் இதுகுறித்து அக்கம்பக்கத்தில் புலம்பியுள்ளார்.

பின்னர் உண்மையிலேயே பார்த்திபன் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து கும்பகோணம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் காவிரி ஆற்றில் தேடியும் பார்த்திபன் கிடைக்கவில்லை. ஆற்றில் தண்ணீர் வேகமாக செல்வதால் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் இன்று அதிகாலை மாணவனின் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவிரி ஆற்றில் பார்த்திபன் பிணமாக மிதந்து வந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவிடைமருதூர் போலீசார் பார்த்திபனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போனில் கேம் விளையாடியதை தாய் கண்டித்ததால் பத்தாம் வகுப்பு மாணவன் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் அப்பகுதி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *