திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரைத் தொடர்ந்து அதிமுக பிரமுகர் வீட்டில் விடிய, விடிய சோதனை நடத்தப்பட்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. சென்னை எம்.ஜி ஆர். நகரில் உள்ள அதிமுக பிரமுகர் வெற்றிவேல் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சோதனை நிறைவு செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று காலை 6.30 மணிக்கு முடிந்தது. ஒப்பந்ததாரரான வெற்றிவேல் வீட்டில் 5 லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி விவகாரத்தில் தொடர்புடையவர் என கூறப்படும் நிலையில் அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியிடம் உதவியாளராக இருந்தவர் வெற்றிவேல். சோதனையின்போது ஏராளமான ஆவணங்களை போலீஸ் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.