கோவை மாவட்டம் சட்டவிரோத செயல்களுக்கு தலைநகரமாக மாறிவருவது பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் கல்லூரி மாணவர்கள் மற்றும் அப்பாவி கூலி தொழிலாளர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் கோவை வெரைட்டி ஹால் சாலையின் அருகில் உள்ள CMC காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக போலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தில் போலிசார் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுவெளியில் நின்றுகொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்ற சதீஷ்குமார் என்பவர் போலிசாரை பார்த்ததும் தப்பி ஓடியுள்ளார். இதில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக போலிசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்து மாவுகட்டு போட்டநிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காவலுக்கு உட்படுத்தினர்.




