உத்தரப் பிரதேசத்தில் தாய் மற்றும் 4 சகோதரிகளை பிளேடால் கழுத்தை அறுத்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவைச் சேர்ந்தவர் அர்ஷத்( 24). இவர் தாய், தந்தையுடன் வசித்து வந்தார்.. இவருக்கு 4 சகோதரிகள் இருந்தனர். இந்த நிலையில்,
லக்னோவில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஓட்டலில் தாய் மற்றும் நான்கு சகோதரிகளுடன் அர்ஷத் தங்கியுள்ளார். அங்கு அவர் உணவில் போதைப்பொருளை கலந்து கொடுத்து தாயையும், தனது சகோதரிகளையும் கழுத்தை நெரித்தும், பிளேடால் கழுத்து மற்றும் மணிக்கட்டை அறுத்தும் கொலை செய்தார். அவர்களைக் கொலை செய்வதையும் அர்ஷத் வீடியோ எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐந்து பேரை எதற்குக் கொலை செய்தேன் என்பதையும் அர்ஷத் வீடியோவில் பேசியுள்ளார். அதில், தானும் தனது குடும்பத்தினரும் இந்துக்களாக மாற விரும்புவதாகவும், அதற்கு அந்த கிராமத்தில் வாழும் முஸ்லிம்களால் ஏற்க முடியவில்லை என்றும், அதற்காக அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவர்கள் துன்புறுத்தி வந்ததாக கூறியுள்ளார். மேலும் கிராம மக்கள் எங்கள் நிலத்தை கைப்பற்றியதால் 10 நாட்களாக குளிரில் அலைந்தோம். அத்துடன் எனது சகோதரிகளை ஹைதராபாத்தில் விற்க விரும்பினார். அதனால் எனது தந்தையும், நானும் சேர்ந்து தாயையும், சகோதரிகளையும் கொன்று விட்டோம். நாங்களும் இறந்து விடுவோம் என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
மேலும், அவர்கள் எங்களை வங்கதேசத்தினர் என்று அழைக்கிறார்கள். அதேசமயம் நாம் இந்தியர்கள் என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. முஸ்லிம்களுக்கு யோகி என்ன செய்தாலும் சரிதான் என்று பேசியுள்ளார். கொலை செய்யப்பட்டவர்கள் தாய் அஷ்மா, சகோதரிகள் அலினா(19). அஸ்கா(16), ரஹீனா(18), அலியா(9) என்பது தெரிய வந்துள்ளது.
இந்த தகவல் அறிந்த, மத்திய லக்னோ காவல்துறை துணை ஆணையர் ரவீனா தியாகி, கூறுகையில். “குற்றம் சாட்டப்பட்டவர், அர்ஷத் (24), தனது சொந்த குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. கொடூரமான செயலைத் தொடர்ந்து, உள்ளூர் காவல்துறையினர் குற்றம் நடந்த இடத்தில் இருந்து குற்றவாளியைப் பிடித்துள்ளனர்,” என்றார். மேலும் இக்கொலைச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்குமா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். புத்தாண்டு அன்று தனது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை இளைஞர் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.