• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தூக்கத்தை தொலைத்த இளம் இந்தியா

அண்மையில் 39 வயது நிரம்பிய ஒரு மென்பொறியாளர் நள்ளிரவில் நெஞ்சுவலியுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


காரணம், கடுமையான மாரடைப்பு. இதுபோல் பணி ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் ஓர் அரசு அலுவலர் அதிகாலையில் நெஞ்சு பாரமாக இருப்பதாகவும், மூச்சுவிடச் சிரமப்படுவதாகவும் மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு மாரடைப்பு ஆரம்ப நிலையில் இருப்பது தெரிய வந்தது.
இருவருக்குமே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மன அழுத்தம், புகைப்பழக்கம், உடற்பருமன் இப்படி மாரடைப்புக்குரிய காரணம் எதுவுமில்லை. இன்னும் சொல்லப்போனால், முதலாமவர் வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்கிறவர். அரசு அலுவலரோ மாரத்தான் ஓட்டக்காரர். அப்படியானால், இவர்களுக்கு மாரடைப்பு ஏன் வந்தது? விசாரித்த அளவில், இருவருக்குமே இரவில் உறக்கம் குறைவு.


அண்மைக் காலமாக, உறக்கமின்மை என்பது ஆபத்தான உடல்நலப் பிரச்சினையாக உருவெடுத்துவருகிறது. ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 64% பேர் போதுமான அளவு உறங்குவதில்லை என்றும், 51% பேர் தினமும் 4-6 மணி நேரம் மட்டுமே உறங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். 10% பேர் 4 மணி நேரத்துக்கும் குறைவாகவே உறங்குவதாக அந்தக் கருத்துக் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இளையோரிடம் ஒரு பெருந்தொற்றுபோல் பரவிவரும் உறக்கமின்மைப் பிரச்சினையைத் தனிமனிதப் பிரச்சினையாகக் கடந்துவிட முடியாது என்று உறக்கச் சிறப்பு மருத்துவர்கள் (Sleep specialists) எச்சரித்துள்ளனர்.

என்ன காரணம்?

கடந்த 2 வருட கொரோனா காலத்தில் பணி இழப்பு, ஊதியம் குறைப்பு, தொழில் நசிவு, வணிக நட்டம், வருமானக் குறைவு, கடன் சுமை, முதுமை, தனிமை, வறுமை இப்படியான காரணங்களால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டு உறக்கம் தொலைத்தவர்கள் அதிகம். அடுத்து, பல பெரிய நிறுவனங்கள்கூடப் பணியாளர்களைக் குறைத்துவிட்டதால், இருக்கும் பணியாளர்களுக்குக் கூடுதல் பணி வழங்கப்பட்டது. அவர்கள் நள்ளிரவைக் கடந்தும் பணியை முடித்துக்கொடுப்பது நடைமுறைக்கு வந்தது. இந்தப் பணிச்சுமை அநேக இளையோரின் உறக்கமின்மைக்கு முக்கியக் காரணமானது.


இன்றைய வாழ்க்கை முறையில் நள்ளிரவைத் தாண்டியும் தொலைக்காட்சி பார்ப்பது, யூடியூபில் சினிமா பார்ப்பது, வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஊடகங்களில் கருத்துகளைப் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் நேரத்தைத் தொலைத்துவிட்டு, மிகவும் நேரம் கழித்துத் தூங்கச்செல்வது இளையோர் மத்தியில் வழக்கமாகிவருகிறது. ஊடகக் கருவிகள் உமிழும் ஒளிக்கதிர்கள், உடலில் மெலட்டோனின் சுரப்பைச் சுருக்கி, இயற்கையாக அமைந்திருக்கும் உறக்கச் சுழற்சியைப் பாதிக்கிறது.
மேலும், மேற்கத்திய உணவுமுறை உறக்கம் குறைவதற்கு அடித்தளம் போடுகிறது. இன்றைக்கு நடுத்தர வர்க்கத்தினர் பலரும் வாரத்தில் இரண்டு நாட்களுக்காவது இரவில் கடைக்குச் சென்று கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த உணவுகளை அதிகம் சாப்பிடுகின்றனர். இதனால் உணவு செரிமானம் அடைய அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது. செரிமானத்துக்காக வயிற்றுப் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் செல்வது, உறக்கத்தைத் தாமதப்படுத்தும்.

நோய்களின் வருகை!

ஒருவர் நாளொன்றுக்குக் குறைந்தது 6 மணி நேரம் உறங்க வேண்டும். அதிகபட்சமாக 8 மணி நேரம் உறங்கினால் நல்லது. ஒன்றிரண்டு நாட்களுக்குத் உறக்கம் குறைந்தால் தவறில்லை. உறக்கம் குறைவது தொடர்கதையானால் உடல்நலம், மனநலம், பணிநலம் ஆகியவை பாதிக்கப்படும். முதலில், வழக்கமான சுறுசுறுப்பு குறையும். கவனம் சிதறும். பணித் திறன் மறையும். மறதியும் களைப்பும் படுத்தும். இந்தத் தொடக்கநிலையில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் அடுத்ததாக எரிச்சல், கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகரித்து ரத்த அழுத்தத்தை எகிறச் செய்யும். நோய்த் தடுப்பாற்றல் குறையும். பாலுறவு சிக்கலாகும்.

உறக்கம் என்பது அழற்சியை அடக்கும் ஆயுதம். இது இல்லாதபோது உடலில் பல உறுப்புகளில் அழற்சி ஏற்படுகிறது. முக்கியமாக, கணையத்தில் ஏற்படும் அழற்சிதான் நீரிழிவுக்கு அடிப்படை. அடங்காத நீரிழிவு இதயத்துக்கு ஆகாது என்று சொல்லத் தேவையில்லை. உடற்பருமன் என்பது ரத்த கொலஸ்ட்ராலைக் கூட்டி மாரடைப்பைத் தூண்டுவது உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆணி வேராக இருப்பதை நாம் அறிவோம்.

அதேவேளையில், உறக்கம் குறைவது உடற்பருமனுக்கும் வழிசெய்யும் என்பதைப் பலரும் அறிவதில்லை. அண்மையில், அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலப் பல்லைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில், உறக்கம் குறைந்தவர்களுக்கு லெப்டின், க்ரிலின் எனும் இரண்டு ஹார்மோன்கள் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. லெப்டின் ஹார்மோன் நாம் சாப்பிடும்போது வயிறு நிரம்பிவிட்டதை உணரச் செய்வது. க்ரிலின் ஹார்மோன் பசியைத் தூண்டி ஆவலோடு உண்ணச் சொல்வது. உறக்கம் குறைந்தவர்களுக்கு வயிறு நிரம்பியதை உணர முடியாமலும், அதிகப் பசி தொடர்வதாலும் கூடுதலாகச் சாப்பிட்டு உடற்பருமனுக்கு ஆளாகிறார்கள்.


இப்போதெல்லாம் வீட்டில் இருந்துகொண்டே அநேகரும் பணி செய்வதால், அலுவலகத்தில் நடப்பதுபோல் வீட்டில் நடப்பது குறைந்துவிட்டது. அதிக நேரம் அமர்ந்துகொண்டே பணி செய்வது அதிகமாகிவிட்டது. 2 மணி நேரம் தொடர்ந்து அமர்ந்துகொண்டே பணி செய்வது ஒரு சிகரெட் புகைப்பதற்குச் சமம். இளம் வயதில் மாரடைப்பு வருவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணம்தான். அதேபோல், இரவில் தாமதமாக உறங்கச்சென்று, காலையில் நேரம் கழித்துக் கண் விழிப்பதால், இன்றைய இளையோருக்கு உடற்பயிற்சி ரொம்பவே குறைந்துவிட்டது. சோம்பலான வாழ்க்கைமுறை இயல்பாகிவிட்டது. இது மாரடைப்புக்கு வசதியாகிவிட்டது. உறக்கம் குறையும் பிரச்சினை இப்போது குழந்தைகளுக்கும் பரவிவருகிறது என்பது கூடுதல் கவலை.

என்ன செய்யலாம்?

இளைய சமூகத்தில் போதுமான உறக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இரு அரசுகளும் புதிய திட்டங்களைக் கொண்டுவர வேண்டும். வல்லுநர்களின் வழிகாட்டும் பயிற்சிகள், குறும்படங்கள், உடற்பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றின் வாயிலாக இதை மேற்கொள்ளலாம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மனநல ஆலோசகர்களை நியமித்து ஆழ்ந்த உறக்கத்துக்கு உதவும் ஆலோசனைகள் தருவதைக் கட்டாயமாக்கலாம். இந்தியாவில் ‘ஐஎஸ்எஸ்ஆர்’ (Indian Society for Sleep Research) அமைப்பு இந்த விழிப்புணர்வு தொடர்பாக முனைந்து செயல்படுகிறது. இதற்குப் போதிய நிதி உதவி வழங்கி அரசுகள் ஆதரிக்கலாம். இதன் மூலம் இளம் வயதிலேயே தூக்க மாத்திரைகளுக்கு அடிமையாவதையும் பணித்திறன் குறைவதையும் வாகன விபத்துகளையும் தடுக்கலாம். கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அதிக கவனம் பெறாமல், அமைதியாகப் பரவிவரும் உறக்கமின்மை எனும் ஆட்கொல்லியை அடக்க அரசுகள் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமே.

  • கு. கணேசன், பொதுநல மருத்துவர்
    தொடர்புக்கு: [email protected]