• Sun. Mar 16th, 2025

ஒரு மாதகால போரட்டத்திற்கு பிறகு மத்திய அமைச்சருடன் மல்யுத்த வீரர்கள் சந்திப்பு

ByA.Tamilselvan

Jun 7, 2023

மல்யுத்த வீராங்கனைகளுக்கு, பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகார் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகுரை மல்யுத்த வீரர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு மல்யுத்த சம்மேளனத் தலைவராகவுள்ள பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்கள் எழுந்தன. ஒரு சிறுமி உட்பட 7 பேர் இதுதொடர்பான புகார்களை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும் பாஜக எம்பி இதுவரை கைது செய்யப்படவில்லை. எம்.பியை கைது செய்யக் கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாக மல்யுத்த வீரர்களின் போராட்டம் நீடித்துவருகிறது.
புதிய நாடாளுமன்றத் திறப்பு விழா நாளின்போது, பேரணியாக செல்ல முயன்ற விளையாட்டு வீரர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக பிடித்து இழுத்து கைது செய்தது தேசிய அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அந்த கைது நடவடிக்கைக்குப் பிறகும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது.
இந்த சூழலில் பிரச்சனைக்கு தீர்வு காண மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வரும்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற வீரர் பஜ்ரங் புனியா, விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் ஆகியோர் மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை அவரின் டெல்லி இல்லத்தில் சந்தித்து பேசினர்.
பிரிஜ் பூஷண் சிங்கை கைது செய்ய வேண்டும், மல்யுத்த சம்மேளனத்தில் தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய அம்சங்களை மல்யுத்த வீரர்கள் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.