• Sat. Oct 12th, 2024

ராணுவ தளபதி மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல்

Byகாயத்ரி

Dec 9, 2021

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளின் சோகமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.


அமெரிக்க ராணுவம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத்தை நவீனமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின் வலுவான நண்பராகவும், இருநாட்டு ராணுவ கூட்டுறவை விரிவுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர், என்றும் புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.
பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் ட்விட்டரில் இரங்கல் குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், பிபின் ராவத்தின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தீரமிக்க வீரராகவும், ராணுவ விவகாரங்களில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலவ் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில்,“ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற அதிகாரிகளின் சோகமான மறைவு அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது. “ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது”அவர் நமது இருதரப்பு சிறப்பு பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை, நண்பரே! பிரியாவிடை, தளபதி!”எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், தங்கள் நாட்டின் முப்படைகள் சார்பில் பிபின் ராவ்த் மற்றும் 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதைப்போல இலங்கை பிரதமர் ராஜபக்சே, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ மந்திரி பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முன்னாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உளளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *