• Sat. Apr 1st, 2023

அரசியல் கட்சிகளின் வார்த்தை ஜாலத்தால் சுயசார்பை இழக்கும் பெண்கள்..!

Byத.வளவன்

Jan 4, 2022

தேர்தல் வந்தாலே பெண்களைச் சுற்றி அரசியல் கட்சிகள் வட்டமிடுகின்றன. பெரும்பாலும் பெண்கள் இளகிய மனதினர் என்பதால் அடிமேல் அடி வைத்தால் தங்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள் என்று அனைவரும் நினைக்கின்றனர்.


பெண்கள் அன்பானவர்களுக்கும் தங்களை மேன்மையாக நினைப்பவர்கள் மாதிரி நடிப்பவர்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பது உலகறிந்த உண்மை. இதனால் அவர்கள் நெஞ்சைத் தொடுமாறு பாசமிக்க வார்த்தைகளையும், ஆன்மீக தத்துவங்களையும் கூறி வாக்குகளை கவர்வதற்கும் முயற்சிக்கிறார்கள். பெண்களின் இந்த பலவீனத்தால் வெளிவேடம் போடுகின்றவர்கள் வெற்றி பெறுவதற்கு பல நேரங்களில் வழி விடுகிறது.


பெண்களுக்கு பொது அறிவும் அரசியல் ஞானமும் குறைவாகவே இருக்கிறது. இது வெளி உலகத்தை அவர்களுக்கு காட்ட சுற்றத்தாலும் நமது சமூக அமைப்பாலுமே ஏற்பட்டதாகும். இதனால் தக்க வேட்பாளரை தேர்தெடுப்பதிலும் கட்சிகளின் கொள்கைகள் செயல்பாடுகளை புரிந்து கொள்வதிலும் அவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கணவர் தந்தை வழிகாட்டுதலிலேயே பெண்கள் இறுதிவரை இருப்பதாலும் தற்சார்பு முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விடுகிறது. இது வாக்களிக்கும் பெண்களுக்கு மட்டுமின்றி தேர்தலில் போட்டியிட விரும்பும் பெண்களுக்கும் ஏற்படுகின்ற தடையாகும். அதே நேரத்தில் சுய சிந்தனையுள்ள பெண்கள் சமூக வலைத்தளங்களிலும் சிக்கி தறி கெட்டு போவதும் தொடர்கிறது.


அதுமட்டுமின்றி பெண்களை இயக்குகின்ற ஆண்களான கணவர், தந்தையர் அவர்களை அரசியல் இயக்கங்களில் சேர அனுமதிப்பதில்லை கொஞ்சம் முற்போக்காக சிந்தித்து அரசியல் கட்சிகளில் தம்மை இணைத்துக் கொள்ளுவோரை வதந்தி பேசி வாட்டி வதைப்பதே நமது சமூகத்தின் தலையாய கடமையாக இருக்கிறது. இதற்கு பெண்கள் மேலான நம்பிக்கை ஆண்களுக்கு குறைந்து வருவதே முக்கிய காரணம்.


கடன் கொடுப்பதாலும் சலுகைகள் செய்வதாகவும் கூறி நம்ப வைத்து பெண்களை திசை திருப்பி அவர்களது வாக்குகளை பறிக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தந்திரம் செய்கின்றன. பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது இயற்கையின் நியதி என்று அறிந்திருந்தும் அதைப்பற்றி மவுனம் சாதிக்கும் கட்சிகள் அனைத்தும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு சிறு சலுகைகள் செய்து வாக்குகளை சேகரிக்க முயலும் வேடிக்கை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. காரணம் பெண்களை ஏமாற்றுவது எளிது என்பது பலருக்கும் தெரிந்தே வந்திருக்கிறது.. இவ்வாறான நிகழ்ச்சிகளில் பெண்களை மனமாற்றம் செய்வதில் அவர்களை வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள் சிலவும் பங்கு வகிக்கின்றன.


இதற்கு கல்வியும் பொருளாதார தற்சார்பும் தனித்தியங்க முடியுமென்ற தன்னம்பிக்கையும் பெண்களுக்கு தேவை. கல்வியறிவின்மை, பொருளாதார பலம் இன்மை, பாலின ரீதியான சுதந்திரமின்மை பெண்களை அரசியலில் ஈடுபட முடியாமலும் தற்சார்பு முடிவெடுக்க முடியாமலும் ஆட்டி வைக்கிறது. முதலில் பெண்கள் இத்தகைய நிலையில் இருந்து விடுபட வேண்டும். தகுந்த வழிகாட்டியை அவர்கள் பெற வேண்டும். அந்த முயற்சியில் அவரே ஈடுபட வேண்டும்.

வெறும் ஜால வார்த்தைகளுக்கு மயங்குவதை நிறுத்த வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் சமூக அறிஞர்களும், அரசியல் தலைவர்களும் பெண்களுக்கு தகுந்த இடங்களை ஒதுக்கி அவர்கள் அரசியல் பயின்று சுதந்திரமாக செயல்பட வாய்ப்பை உருவாக்க முன்வரவேண்டும். அதுவரை பெண்கள் வாக்கு தங்கள் குடும்பத்தவர் நிர்பந்தத்தாலும் விரும்பத் தகாத தற்காலிக உறவுகளாலும் தகாத வேட்பாளர்களுக்கு போய்ச் சேர்வதை தடுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *