சென்னை அடுத்த தாம்பரம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சுகுமார் (71) என்பவர், தனது மனைவி ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். வீட்டு வேலைகள் மற்றும் சமையலுக்கு உதவியாக ஆன்லைன் செயலி மூலம் வேலைக்காரரை தேடி வந்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் ஆலத்தூர் அருகே உள்ள பாலவேடு பகுதியைச் சேர்ந்த சாந்தகுமார் என்பவரின் மனைவி லட்சுமி (50) என்பவர் தொடர்பு கொண்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
நவம்பர் 14ஆம் தேதி வேலைக்கு சேர்ந்த லட்சுமி, டிசம்பர் 15ஆம் தேதி “வீட்டிற்கு சென்று வருகிறேன்” என்று கூறி சென்றவர், அதன் பின்னர் திரும்பி வரவில்லை. அவருடைய செல்போனுக்கும் தொடர்பு கிடைக்காததால் சந்தேகம் அடைந்த சுகுமார், வீட்டின் பீரோவைத் திறந்து பார்த்த போது, அதிலிருந்த 12¾ சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து, வேலைக்கு சேர்க்கும்போது வாங்கியிருந்த லட்சுமியின் ஆதார் கார்டு விவரங்களின் அடிப்படையில், சுகுமார் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி, லட்சுமியை கைது செய்தனர். அவரிடமிருந்து 12 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட லட்சுமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் மூலமாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது முழுமையான விசாரணையும் சரிபார்ப்பும் அவசியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துகிறது.




