• Tue. Dec 10th, 2024

மதுரை முதல் ஆண்டிபட்டி வரை விரைவு ரயில் சேவை தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

மதுரையில் இருந்து போடி வரையிலான 90 கிலோ மீட்டர் ரயில் சேவை 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டு, அகல ரயில் பாதைக்கான பணிகள் நடைபெற்று வந்தது.

மந்தமாக நடந்து வந்த இந்த பணி மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கி ரூபாய் 450 கோடி செலவில் அகல ரயில் பாதை பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக மதுரையில் இருந்து ஆண்டிபட்டி வரையிலான அகல ரயில் பாதை பணிகள் முழுவதும் நிறைவடைந்துள்ளது. போடி வரை சில அத்தியாவசிய பணிகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  பல கட்டங்களாக இப்பகுதியில் அதிவேக ரயில் ஓட்டம், அதிவேக ரயில் இன்ஜின் ஓட்டம் பரிசோதனை செய்து அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆய்வு செய்யப்பட்டது. ஆனாலும் ஆண்டிபட்டி வரைக்குமான முதல்கட்ட ரயில் சேவை தொடங்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று 31ம் தேதி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் விரைவு ரயில் இன்ஜினை இயக்கி ஆய்வு செய்ய உள்ளதாக மதுரை ரயில்வே துறை அறிவித்திருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த ஆய்வு ஒத்திவைக்கப்பட்டது .இந்நிலையில் இந்த ஆய்வு பணிகளை தற்காலிகமாக மேற்பார்வை செய்வதற்காக ரயில்வே கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா மற்றும் கோட்ட ரயில்வே அதிகாரிகள் இன்று 31ஆம் தேதி ஆய்வு செய்தனர். அப்போது ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி பொறுப்பாளர் மீனாட்சிசுந்தரம் தலைமையிலும் ,விவசாய சங்கத்தினரும் ,அவரிடம் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளதால், முதல் கட்டமாக மதுரை முதல் ஆண்டிபட்டி வரை ரயில் சேவை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பணிகள் முற்றிலும் நிறைவடைந்த நிலையில் விரைவில் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதன்மை நிர்வாக அதிகாரி பிரபுல்ல வர்மா தெரிவித்தார்.