• Thu. Apr 25th, 2024

‘கடவுளின் தீவு’ என்று சொல்லப்படும் ஹாங்காங்கில் ஜனநாயகம் மலருமா..?

Byத.வளவன்

Jan 22, 2022

கேரளா கடவுளின் தேசம் என்று சொல்லப்படுவதுண்டு. அதே போல ஹாங்காங் ஆசியாவில் கடவுளின் தீவு என அழைக்கப் படும் அளவுக்கு அழகானது. ஆனால் அங்கு சில ஆண்டுகளாக நடக்கும் சம்பவங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன.
என்ன தான் நடக்கிறது ஹாங்காங்கில்?
சில ஆண்டுகளாகவே இங்கு ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம் தொடங்கி விட்டது. ஆனால் இதை அடக்கு முறை மூலம் அரசு ஒடுக்கி வருகிறது. சீன அரசும், ஹாங்காங் நிர்வாகமும், போராட்டத்திற்கான ஆதரவு எதிர்பார்த்தது போலவே குறையத் தொடங்கியதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுவிட்டன. போதாக்குறைக்கு, நீதிமன்றமும், அன்றாட வாழ்க்கைக்கும், வணிகர்களின் செயல்பாட்டுக்கும் இடையூறாக இருக்கும் போராட்டக்காரர்களை அகற்றும்படி உத்தரவு பிறப்பித்தது நிர்வாகத்திற்கு மிகவும் வசதியாகப் போய்விட்டது.
கடந்த 1842-ல் சீன அரசுடன் பிரிட்டிஷார் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஹாங்காங் பிரிட்டனின் காலனியானது. 1997வரை, பிரிட்டிஷ் காலனியாக இருந்தாலும்கூட, ஹாங்காங் மக்கள் தங்களது அரசை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை பெற்றிருந்தனர். 1997-ல் பிரிட்டனும் சீனாவும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஹாங்காங் சீனாவுக்குத் திருப்பி அளிக்கப்பட்டது. அப்போது விதிக்கப்பட்ட நிபந்தனைப்படி, ஹாங்காங் சீனாவைப்போல கம்யூனிச நாடாக இருக்காது என்பதும், சுதந்திரமாகத் தங்கள் அரசை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருக்கும் என்பதும் சீன அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அப்போதைக்கு அதை ஏற்றுக்கொண்ட சீன அரசு ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்க முற்பட்டிருப்பதுதான் இப்போதைய பிரச்னைக்குக் காரணம்.
யார் வேண்டுமானாலும் தலைமை நிர்வாகி பதவிக்குப் போட்டியிடலாம் என்பதை சீன அரசு ஏற்றுக் கொள்வதாக இல்லை. சீனத் தலைமை ஏற்றுக்கொள்ளும் நபர்களில் ஒருவராக அவர் இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. சீனாவின் கம்யூனிசக் கட்சித் தலைமையால் பரிந்துரைக்கப்படும் நபர்கள் போட்டியிடுவார்கள். அவர்களில் ஒருவரைத்தான் ஹாங்காங் மக்கள் தேர்ந்தெடுத்தாக வேண்டும். இதை ஏற்றுக் கொள்ளாத மாணவர்களும், பெருவாரியான பொதுமக்களும், இந்த முடிவை எதிர்த்துப் போராடத் தலைப்பட்டனர். இளைஞர்கள் மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான ஹாங்காங் மக்கள் குடையைப் பிடித்துக் கொண்டு குடும்பம் குடும்பமாகத் தெருவில் வந்தமர்ந்து போராடத் தலைப்பட்டனர். கடந்த வருடங்களில் தீவிரமான இந்தப் போராட்டத்தை முதலில் மிளகுத்தூள் அடித்தும், தண்ணீரைப் பீய்ச்சி அடித்தும் கலைக்க முற்பட்டது ஹாங்காங் நிர்வாகம். ஒரு கட்டத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தைத் தொடர, ஏனைய பொதுமக்களில் பலர் தத்தம் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர்.

அப்படியே போராட்டத்தைத் தொடரவிட்டு அவர்களே சலித்துப்போய், போராட்டத்தைக் கைவிடச் செய்வது என்பதுதான் சீன அரசின் வழிகாட்டுதல்படி, ஹாங்காங் நிர்வாகம் எடுத்த முடிவு. மாணவர்களும், இளைஞர்களும் மனம் தளராமல், ஹாங்காங்கின் முக்கிய வணிகப் பகுதியிலும், அரசு அலுவலகங்கள் இருக்கும் நிர்வாகப் பகுதியிலும் தெருவை அடைத்தபடி அமர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். உலகின் நிதிப் பரிமாற்ற கேந்திரமான ஹாங்காங் இதனால் மூச்சுத் திணறியது. ஒருபுறம், தங்கள் குழந்தைகளின் படிப்பு கெடுவதை விரும்பாத பெற்றோர் போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினர். இன்னொருபுறம், தங்கள் வணிகம் பாதிக்கப்பட்டதால் சிலர் போராட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கினர். டாக்சி ஓட்டுநர்கள் இதனால் தங்களுக்கு வருமான இழப்பு ஏற்படுவதாகக் குறை கூறினர். அவர்களை ஹாங்காங் நிர்வாகம் போராட்டத்திற்கு எதிராகக் குரலெழுப்பவும், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவும் தூண்டியது.

நீதிமன்ற உத்தரவும் கிடைத்த பிறகு ஹாங்காங் நிர்வாகத்திற்குக் கேட்கவா வேண்டும்? போராட்டக்காரர்கள் அகற்றப்பட்டு விட்டனர். மூத்த தலைமுறையினரால் கைவிடப்பட்டு, அன்றாட வியாபாரத்தில் மட்டுமே குறியாக இருக்கும் சக குடிமக்களால் ஏமாற்றப்பட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாக்க வீறுகொண்டு எழுந்த இளைஞர் கூட்டம், வேறு வழியின்றிப் போராட்டத்தைக் கைவிட்டிருக்கிறது. 1989-ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெய்ஜிங்கில் தியானன்மென் சதுக்கத்தில் ஜனநாயகம் கோரி ஏழு வாரங்களாகத் திரண்டெழுந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை, சீன அரசு சுட்டுப் பொசுக்கியது. அதுபோல, இந்த இளைஞர்களையும் சுட்டுத் தள்ளாமல் விட்ட சீன அரசு, ஹாங்காங் விஷயத்தில் ராஜ தந்திரமாக செயல்பட்டது என்றும் ஒரு கருத்து உண்டு. காரணம் ஹாங்காங்கில் நடக்கும் எந்த பிரச்சனையும் பிரச்சனையும் சீன அரசை தனிமைப் படுத்திவிடும் என்று அமெரிக்காவும் பிரிட்டனும் சீனாவை எச்சரித்தது தான். இனியாவது ஹாங்காங்கில் ஜனநாயகம் மலருமே என்பது தான் நமது கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *