• Tue. Apr 23rd, 2024

பச்சன் பாண்டே, ஜிகர்தண்டாவை மிஞ்சுமா?

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஜிகிர்தண்டா’. பாபி சிம்ஹா, சித்தார்த் நடிப்பில் வெற்றி பெற்ற இப்படத்தின் இந்தி பதிப்பு ஆக உருவாகியுள்ள படம் பச்சன் பாண்டே ! ஃபர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமார், கிரித்தி சனோன், அர்ஷத் வர்ஸி, ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.

பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது வாங்கித் தந்த ‘அசால்ட்’ சேது கதாபாத்திரத்தில் அக்‌ஷய் குமார். பச்சன் பாண்டே எனும் பெயரில் நடித்துள்ளார். சித்தார்த் கதாபாத்திரத்தை இப்படத்தில் இயக்குநர் பெண்ணாக மாற்றியுள்ளார். திரைப்பட இயக்குநராக விரும்பும் இளம்பெண்ணாக கிரித்தி சனோன். கருணாகரன் பாத்திரத்தில் அர்ஷத் வர்ஸி. அசல் படத்தில் இல்லாத ஒரு புதிய கதாபாத்திரத்தையும் இயக்குநர் இதில் சேர்த்துள்ளார். அது பச்சன் பாண்டேவின் காதலியாக வரும் ஜாக்குலினின் கதாபாத்திரம். இது வெறும் ஒரு சில நிமிடங்களே வரும் துண்டு கதாபாத்திரம் தான் என்பது முன்னோட்டத்தை பார்க்கும்போதே தெரிகிறது.

நடிப்பு வாத்தியார் கதாபாத்திரத்தில் பங்கஜ் திரிபாதி. குருசோமசுந்தரத்தின் அசல் கதாபாத்திரத்துக்கு நியாயம் செய்வார் என்று நிச்சயமாக நம்பலாம். இவர்கள் தவிர பச்சன் பாண்டேவின் அடியாட்களாக வருபவர்கள், கதை சொல்லி டார்ச்சர் செய்யும் டீக்கடை தாத்தா என அனைவரும் படத்தில் இருக்கின்றனர்.
ஜிகர்தண்டாவில் ஒரு கேங்ஸ்டர் படத்துக்கே உரிய ‘ரா’வான ஒரு கலர் டோன் படம் முழுக்க பயணம் செய்யும். அதற்கேற்ற நேர்த்தியான ஒளிப்பதிவும் லைட்டிங்கும் இயல்பாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் பச்சன் பாண்டே முன்னோட்டத்தில் பல இடங்களில் க்ரீன் மேட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் பல்லிளிக்கின்றன. இயல்பாக இருக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டமாக காட்டப்பட்டுள்ளன. எனினும் படத்தின் திரைக்கதையில் எந்தவித சொதப்பலும் இல்லாதிருந்தால் இவை ஒரு குறையாக தெரியப்போவதில்லை.

ஒரிஜினலை மிஞ்சும் வன்முறைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் முன்னோட்டம் முழுவதும் வருகின்றன. பல காட்சியமைப்புகள் தெலுங்குப் படங்களை நினைவூட்டுகின்றன. ஜிகர்தண்டா படத்தின் பலமே படம் முழுக்க வரும் இயல்பான நகைச்சுவை. இதிலும் அதே நகைச்சுவை காட்சிகள் இயல்புத்தன்மை மாறாதிருந்தால் சிறப்பு. பின்னணி இசையையும் லேசான மாற்றங்களுடன் அப்படியே பயன்படுத்தியிருப்பது ரசிக்கும்படி இருக்கிறது.

ஜிகர்தண்டாவில் விஜய் சேதுபதி ஒரு சில மணித்துளிகளே வந்தாலும் அவரது கதாபாத்திரம் செம மாஸாக அமைக்கப்பட்டிருக்கும். இந்தியில் அந்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. முன்னோட்டத்தில் அந்த கதாபாத்திரம் ரகசியம் காக்கப்பட்டிருக்கிறது.

‘பச்சன் பாண்டே’ ஒரிஜினலான ‘ஜிகிர்தண்டா’வை மிஞ்சுகிறதா அல்லது வழக்கமான ரீமேக்குகளில் ஒன்றாக மாறப்போகிறதா என்பதை மார்ச் 18 திரையில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *