
மேகமலை புலிகள் காப்பகத்தில், கடந்தாண்டை காட்டிலும் வன உயிரினங்கள் அதிகரித்துள்ளதா? இல்லையா? என வனத்துறை அதிகாரிகள் மூலம் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்கவால் குரங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதால் அதன் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே சுமார் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மேகமலை. சின்னமனூரில் இருந்து மலைப்பாதை வழியாக தான் செல்ல முடியும். 30 கிலோ மீட்டர் வனப் பகுதியை கடந்தவுடன், அடுத்து கண்ணுக்கு விருந்தளிக்கும் வகையில் சுமார் 20 கிலோ மீட்டர் வரை தேயிலை மற்றும் காப்பி தோட்டங்கள் நம்மை வரவேற்கும். குறுகலான சாலை என்பதால் வாகனங்கள் ஊர்ந்து தான் செல்ல முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால், இங்கு வனவிலங்குகள் அதிகம் உள்ளன. மேலும் இங்குள்ள புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு பணி வனத்துறை அதிகாரிகளால், தற்போது நடைபெற்று வருகிறது.
மேகமலை வனச்சரக அதிகாரி ஒருவர் கூறியதாவது; மேகமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரினங்கள் கணக்கெடுப்பு மார்ச் 5ம் தேதி துவங்கியது. கூடலூர், கம்பம், சின்னமனூர், கண்டமனூர், வருசநாடு மற்றும் மேகமலை என ஆறு சரகங்கள் உள்ளன. இந்த ஆறு சரணங்களில் தற்போது வன உயிரின கணக்கெடுப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்டமாக, சில நாட்களுக்கு முன்பு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து மார்ச் 8, 9, 10ம் தேதிகளில் நேர் கோட்டு முறையில் 15 மீட்டர் நீளத்திற்கும் 20 மீட்டர் அகலத்திற்கு வனப்பகுதிகள் பிரித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இப்பணி தினமும் காலை 6:30 மணிக்கு துவங்கும். அதிகாலை நேரங்களில் வன உயிரினங்களின் கழிவுகள், சாணம், புழுக்கை போன்றவைகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். பின் அங்குள்ள புல் வகைகள், செடிகள் மற்றும் தாவர வகைகள் என கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டமனூர், வருசநாடு வனச் சரகங்களில் சிங்கவால் குரங்குகள் அதிகளவு காணப்பட்டன. மருத்துவ தேவைக்காக அவைகள் வேட்டையாடப்பட்டு வருவதால், அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதையும் முக்கியமாக கண்காணித்து வருகிறோம்.
இதையத்து, வன விலங்குகளை கண்காணிக்கும் பொருட்டு ஒவ்வொரு சரகத்திலும் சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன் மூலம் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கணக்கெடுப்பின் மூலம் கடந்தாண்டை காட்டிலும் வன எண்ணிக்கை அதிகரித்து உள்ளதா? இல்லையா? என தெரிந்துவிடும், என்றார்.
