• Thu. Mar 28th, 2024

சாதி மோதல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை, சமூக பிரச்சினை – முதல்வர்..!

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாட்டின் நிறைவு நாளில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், குற்றம் அதிகம் நடப்பதாக நினைக்க வேண்டாம்.
இப்போது தான் புகார்கள் அதிகமாக வருகின்றன. சாதி மோதலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து மனமாற்றம் செய்ய வேண்டும். சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைத்தளங்கள் மூலம் ஜாதி மத மோதல்களை ஏற்படுத்த நினைப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக மோதல்களை தடுக்க பல்வேறு அமைப்பினருடன் இணைந்து காவல்துறையினர் செயல்பட வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர வேண்டும். குற்றங்களே இல்லாத சமூகத்தை உருவாக்குவதோடு, திட்டமிட்டு உருவாக்கப்படும் மத மோதல்களை தடுக்க வேண்டும். சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அதிகாரிகள் பார்த்துக் கொள்ள வேண்டும். குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், அவர்களை சாதி, மதம், அரசியல் என அடையாளபடுத்தக்கூடாது. மகாராஷ்டிரா போன்று ரவுடிகளை ஒழிக்க தனிச்சட்டம் கொண்டு வரப்படும். மத மோத தடுப்பு பிரிவுகள் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கப்படும். குற்றம் புரிவோருக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்க கூடாது என தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத் தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும். தொழில் போட்டியால் உருவாகும் ரவுடிகளுக்கு அதிகாரிகள் உடந்தையாக இருக்கக் கூடாது. போக்ஸோ வழக்குகளில் விரைந்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்தவர்கள் யாரும் தண்டனையிலிருந்து தப்பி விடக்கூடாது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *