• Sat. Apr 20th, 2024

இஸ்ரேலில் வன உயிரின பேரழிவு…புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்தன…

Byகாயத்ரி

Dec 28, 2021

இஸ்ரேலில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் எதிரொலியாக ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த கொக்குகள் மடிந்திருக்கும் நிலையில், இதனை மிக மோசமான வன உயிரின பேரழிவு என இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

வடக்கு இஸ்ரேலின் ஹுலா பள்ளத்தாக்கு பகுதியில் பறவை காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவுக்கு செல்லும் வழியில் இஸ்ரேலின் ஹுலா பகுதியில் உள்ள நீர்நிலைகளில் லட்சக்கணக்கான பறவைகள் குவிந்தன.


அப்போது 5,000க்கும் மேற்பட்ட கொக்குகள் பறவை காய்ச்சல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டன. இதுவரை 5,200 கொக்குகள் உயிரிழந்து இருப்பதாக இஸ்ரேல் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட ஆப்ரிக்க கொக்குகள் துடிதுடித்து இறந்து வருவது வனத்துறையினரை கலங்க வைத்துள்ளது.சிதறி கிடக்கும் இறந்த கொக்குகளை கழுகு உள்ளிட்ட பறவைகள் உட்கொண்டால் பறவை காய்ச்சல் மேலும் அதிகரிக்கும் ஆபத்து உள்ளது. இதனையடுத்து மடிந்த பறவைகளை பாதுகாப்பாக அகற்றும் பணியில் இஸ்ரேல் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்படும் 5 லட்ச கோழிகளை அழிக்க மாநில நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 லட்சம் கொக்குகள் இஸ்ரேல் வழியாக ஆப்பிரிக்காவுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *