• Thu. Jun 8th, 2023

இலவச லேப்டாப் 2 ஆண்டுகளாக ஏன் வழங்கவில்லை?

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணிணி (லேப்டாப்) வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டம் 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை யாருக்கும் குறை வைக்காமல் லேப்டாப் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த கல்வியாண்டு மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கும் இன்னமும் லேப்டாப் வழங்கப்படவில்லை. லேப்டாப் வழங்குவதின் நோக்கம் பள்ளியை தவிர்த்து மாணவர்கள் ஆன்லைன் வழியாகவும் கல்வி கற்க வேண்டும் என்பதே.
கல்லூரிகளுக்குச் சென்றாலும் இது பயனுள்ளதாக இருக்கும் என்பதால் தான் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் முன்னெப்போதையும் விட இப்போது தான் லேப்டாப், ஸ்மார்ட்போன்களின் தேவை அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகள் முறையாகவே செயல்படவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளாக லேப்டாப் வழங்கப்படாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது.

இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கு அதனை தயாரிக்கு ஒப்பந்தம் கோர எந்தவொரு நிறுவனமும் ஆர்வம் காட்டாததே அதற்குக் காரணம் என கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கணிணி, லேப்டாப்களின் தேவை உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது. நுகர்வு அதிகமாக இருப்பதால் அதன் விற்பனையும் விலையும் உயர்ந்த வண்ணமே இருக்கின்றன. ஆகவே லேப்டாப்பை தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் தமிழ்நாடு அரசு கோரும் விலைக்கு ஒப்பந்தம் மேற்கொள்ள முன்வரவில்லை.

அந்நிறுவனங்கள் பெரிய லாபம் எதிர்பார்க்கின்றன. ஆனால் அரசோ குறைந்த விலையில் லேப்டாப்களை தயாரிக்க வேண்டும் என சொல்கிறது. அதற்கான டெண்டரையும் அறிவித்தது. ஆனால் Lenovo, Acer போன்ற நிறுவனங்கள் குறைந்த லாபத்தில் லேப்டாப்களை தயாரிக்க விரும்பவில்லை. சொல்லப்போனால் டெண்டரில் கலந்துகொள்ளவே அந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை. இதனாலேயே மாணவர்களுக்கு லேப்டாப்களை உரிய நேரத்தில் கொடுக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *