• Sun. Oct 1st, 2023

எதுக்குப்பா நடிக்கிறீங்க .. மக்கள் முன்ன மாதிரி இல்ல .. மனம் திறக்கும் கே.டி.ஆர்

நவம்பர் 4 ,2020 ஆண்டு நடந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு அந்த சந்திப்பில் பேசிய போது ஸ்டாலினுக்கு என்ன கொள்கை இருக்கு , என்னைய ஜெயில்ல தூக்கி போட்டுருவேன்னு சொல்ற என்ன மிரட்டுறியா ? நல்ல ஆம்பளையா இருந்தா விருதுநகருக்கு வா என்று ஆவேசமாக பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

ஆத்திரத்தில் ஒரு சொல் வெல்லும் , ஒரு சொல் கொல்லும் இது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இத்தனை ஆண்டு கால அரசியலை கணக்கில் எடுத்து கொள்ளாமல் தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு ஜெயிலுக்கு முன் , ஜெயிலுக்கு பின் என்று தான் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு பழக்கம் பக்குவம் அனைத்தும் மாறி உள்ளது.

வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் தேடப்பட்டு வந்து கர்நாடகாவில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து விட்டு யாரிடமும் ஏதும் பேசாத முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அரசியல் டுடே க்கு பிரத்யேக பேட்டி அளித்திருந்தார்.

நம்மிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைவா முன்ன மாதிரி எல்லாம் இப்போ கிடையாது.மக்கள் எல்லாரும் ரொம்ப தெளிவாகிட்டாங்க எதுக்கு அவங்கள ஏமாத்திட்டு இருக்கீங்க, உண்மைய சொல்லி ஒட்டு கேளுங்க.
கிராமத்துல 1980,1990 தேர்தல் நடந்தப்போ , ஒரு 100, 200 பேரு கரகாட்டம் , மயிலாட்டம் மேளதாளம் ,ஊருக்கே கெட வெட்டி விருந்து வச்சு ஓட்டு கேட்டோம் . அப்போ எல்லாம் மக்கள் எப்டி வந்து ஓட்டு கேக்குறாங்கனு பாருனு ஒரு ஆச்சரியத்துல ஓட்டு போட்டாங்க ,. அது அப்போ இருந்த பேஷன் , இப்போ அது எல்லாம் மாறிடுச்சு.
மக்களோட மக்களா போய் ஓட்டு கேளுங்க ஆரவாரமா போய் எதுக்கு அலப்பறை கொடுக்குறீங்க. அத மக்கள் மிரட்சியா பார்க்குறாங்க. நான் ஓட்டு கேட்டு போனப்போ கொட்டு வச்சு மலர் கிரீடம் கையில வாள கொடுக்குறது வேல கொடுக்குறது. அதெல்லாம் வேண்டாம் நான் கேட்டேனா இல்ல மக்கள் கேட்டாங்களா , கையில வேல , வாள பார்த்த உடனே நீங்க நேர அங்குட்டு போய் சண்டை போடுங்கனு சொல்றாங்க இது நமக்கு தேவையா.
மக்கள் தெளிவா கேக்குறாங்க அடுத்தவர எதுக்கு விமர்சனம் செய்யுறீங்க, நீங்க என்ன செய்தீங்க ? என்ன செய்ய போறீங்கனு சொல்லுங்கனு மக்கள் கேக்குறாங்க. அப்போ அவங்க கேக்குற மாதிரி என்ன செய்ய போறோம்னு சொல்லி ஓட்டு கேளுங்க, தேவையற்ற தனிப்பட்ட விமர்சனம் தேவை இல்லை. அதுனால பல விஷயம் அனுபவிச்சுட்டு அந்த அனுபவத்துல தான் நான் எல்லாத்தையும் சொல்றேன்.

வெறுப்பு அரசியலே வேண்டாம் 20 ஆயிரம் ஓட்டுல ஜெயிக்க வேண்டியது, முடியல ஏன் அரசியல் பக்குவம் படல ஒரு தெளிவு நமக்கு கெடைக்கல. ஆனா நல்ல பாடம் எனக்கு கெடச்சுருக்கு. அதிமுகவிற்கு , திமுகவிற்கு ஒரு ஓட்டு வங்கி இருக்கு அத தக்க வச்சுக்குவாங்க , ஆனா அதுக்கு இடையில யாருக்கு ஓட்டு போடலாம்னு இருக்குற மக்கள் தான் இவரு என்ன இப்படி பேசுறாரு , இப்படி ஓட்டுகேட்டு வரும் போதே ஆரவாரமா வரவங்க ஜெயிச்சா எப்படி ஆடுவாங்கன்னு பயபடுறாங்க அதுக்கு நாம இடம் கொடுக்க கூடாது. ஆர்ப்பாட்டம் இல்லாம போய் ஓட்டு கேளுங்க மக்கள் என்ன முடிவு எடுத்தால் நாம ஏத்துகிட்டு தான் ஆகணும் அப்படி இருக்கும் ஆச்சு மூச்சு னு ஆவேசமாக பேசக்கூடாது.

இப்போ நாம் தமிழர் சீமான் பக்கத்துல பல இளைஞர்கள் நிக்க காரணம் என்ன விமர்சனம் இருந்தாலும் பேசுனாலும் ,கொண்ட கொள்கையில நிக்கிறாங்கல, திமுகல இருந்து வைகோ வெளிய வந்தப்போ ஒரு இளைஞர் படை இருந்துச்சு பாருங்க அந்த மாதிரி இளைஞர்கள கட்டுப்பாட்டுல வசுருக்காருல. அப்போ அது எப்படி சாத்தியம் ஆச்சு நான் விளையாட்டுக்கு சொல்லல அதிமுக திமுகவுக்கு அடுத்து ஒரு பேசப்படுற ஆளா இருக்காருல அத நம்ம கட்சி தொண்டர்கள் யோசிச்சு பார்க்கணும்
நான் ஜெயில பக்குவபட்டதுக்கு இன்னொரு காரணம் புத்தகம் தான். இப்படி ஒரு ராஜேந்திர பாலாஜியா நீங்க யோசிக்கலாம். எனக்கு புத்தகம் வாசிக்கிறது ரொம்ப புடிக்கும். சேரன் செங்குட்டுவன் , பாஞ்சாலி னு ஐந்து புத்தகம் கொடுத்தாங்க அதுல மூணு புத்தகம் படிச்சு முடிச்சேன். தலைவர்கள் போரட்ட வரலாறு புத்தகம் எல்லாம் எனக்கு ரொம்ப புடிச்ச ஒரு விஷயம். நேதாஜி ஜெர்மனி போனப்போ ஹிட்லர் இந்தியாவில் இருந்து வந்த ஒரு மாவீரன் நீங்க தானானு கேட்டப்போ, இத்தனை ஆயிரம் படைகளை திரட்டி உங்கள் முன் வந்து நிற்கும் இந்தியனின் தோளைதொட்டு விசாரிக்கும் உரிமை தைரியம் ஹிட்லருக்கு தான் உள்ளது என நேதாஜி பேசியதை கண்டு ஹிட்லர் வியந்தார். இதையெல்லாம் படிக்கும் போது நமக்கு தெரியாம உள்ளக்குள்ள ஒரு தைரியம் வரும், இத எல்லாம் படிக்க படிக்க சோறு தண்ணி இல்லாம பசி இல்லாம கூட இதே எல்லாம் படிச்சுட்டே இருக்கனும்னு தோணும்.

அப்படி புத்தகம் தான் ஒரு நல்ல மனுசனை உருவாக்கும்.கலைஞர், வைகோ பேசுறதை எல்லாம் கேட்டுருக்கீங்களா அப்போ எவ்வளவு புத்தகம் படிச்சுருபாங்க எவ்வளவு அறிவு மேடையில பேசும் போது அப்படி இருக்கும், அதே மாதிரி தான் அம்மாவும் அவங்க படிக்காத புத்தகம் இல்ல, இப்படி பேசிக்கிட்டே போகலாம்னு பேசி முடிச்சாரு.

தன் சுற்றம் அறிந்து தன்னிலை அறிந்து ஒரு நீண்ட நெடிய பேட்டி யாரையும் விமர்சிக்காமல் நீ ஆம்பளையா நான் ஆம்பளையா என்ற ஆரவாரம் இல்லாமல், அரசியல் என்ன என்பதை புரிந்து செயல்பட துவங்கி உள்ளார் என்பது தெரிகிறது. சுதந்திர இந்தியாவின் போது தற்போது உள்ள பாஜக செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் காங்கிரஸ் செய்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் திருந்தி பொது நீரோட்ட அரசியலுக்கு பழக்கப்பட்டு அடிபட்டு திரும்பிய போது ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் இல்லை.

அன்று ராகுல்காந்திக்கு எங்கு மொட்டை போட்டார்கள் அவர் இந்தியரா என்றெல்லாம் கேள்வி கேட்டவர் , இன்று ராகுல் காந்தியை போல திருந்தி தானும் ஒரு ஜனநாயக அரசியல்வாதி என்பதை உணர்ந்த ராஜேந்திர பாலாஜி தன்னை முழுவதுமாக மக்களிடம் கொடுத்துவிட்டேன். இனி மக்கள் என்ன முடிவெடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.மக்களில் ஒருவனாக இருந்துகொள்கிறேன் என்று மக்களுடன் நிற்கிறார். மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *