• Tue. Apr 16th, 2024

ஒரு எம்.பி சீட்டுக்காக முந்தியடிக்கும் முக்கிய தலைவர்கள்… யாருக்கு கிடைக்குமோ..?

Byகாயத்ரி

Mar 29, 2022

தேர்தல் வந்தாலே காங்கிரசில் சீட்டுக்காக முக்கிய தலைவர்கள் மல்லுகட்டுவது, வழக்கமானதுதான்.

இதில் டெல்லி மேல்சபை எம்.பி. பதவி என்றால் விடுவார்களா என்ன? கோடிகணக்கில் செலவு செய்ய வேண்டியதில்லை. கஷ்டப்பட்டு தெரு தெருவாக, வீடு வீடாக அலைய வேண்டியதில்லை. ஒரு முறை பதவியை பெற்றுவிட்டால்… 6 வருடம் எம்.பி.யாக இருக்க முடியும். தமிழகத்தை சேர்ந்த 6 மேல்சபை எம்.பி.க்களின் பதவிக்காலம் வருகிற ஜுன் மாதம் நிறைவடைகிறது. இதில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய 3 பேரும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீதகிருஷ்ணன், விஜயகுமார் ஆகிய 3 பேரும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள்.

இதில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசுக்கு ஒரே ஒரு எம்.பி. பதவி வழங்குவதற்கு தேர்தல் நேரத்தில் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு எம்.பி. சீட் காங்கிரசுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த ஒரு இடத்தை கைப்பற்ற காங்கிரசுக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுதர்சன நாச்சியப்பன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசுவநாதன், பிரவீண் சக்கரவர்த்தி ஆகிய 6 பேரும் போராடுகிறார்கள்.

கடந்த 1986 முதல் எம்.பி. மத்திய மந்திரி என்று தொடர்ந்து பல பதவிகளை வகித்து வரும் ப.சிதம்பரம் டெல்லி அரசியலில் கோலோச்சுபவர். தற்போது மும்பையில் இருந்து மேல்சபை எம்.பி.யாக உள்ளார். அவரது பதவிக்காலமும் முடிவடைய இருப்பதால் தமிழகத்தில் இருந்து மீண்டும் எம்.பி. பதவியை கைப்பற்ற காய்களை நகர்த்துகிறார். சுதர்சன நாச்சியப்பன் 2 முறை டெல்லி மேல் சபை எம்.பி.யாகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 2009 முதல் 2014 வரை மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார். இப்போது கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரும் எம்.பி. பதவிக்கு குறிவைத்துள்ளார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தமிழக காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர். 2004-ல் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மத்திய மந்திரி ஆனார்.கடந்த தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனவே அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 2004 பாராளுமன்ற தேர்தலில் எம்.பி.யாக வெற்றி பெற்றார். தமிழக காங்கிரஸ் தலைவராக 3 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளார். அவரது பதவிகாலத்தில் எம்.எல்.ஏ. தேர்தல், எம்.பி. தேர்தலை சந்தித்து காங்கிரசுக்கு கணிசமான உறுப்பினர்களை பெற்று தந்ததை காரணம் காட்டி காய் நகர்த்துகிறார். காஞ்சிபுரம் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான விசுவநாதனும் இந்த ரேசில் இருக்கிறார். அகில இந்திய செயலாளராக இருக்கும் அவர் கேரளா மற்றும் லட்சத்தீவு மாநிலங்களின் மேலிட பொறுப்பாளராகவும் இருக்கிறார்.சுதந்திர இந்தியாவில் இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நேரடி நியமன எம்.பி. பதவியை தலித் சமூகத்துக்கு வழங்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று சோனியா, ராகுலை நேரடியாகவே சந்தித்து மனு கொடுத்துள்ளார். கட்சியின் டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை குழு ஒருங்கிணைப்பாராக இருக்கும் பிரவீண் சக்ர வர்த்தியும் இந்த எம்.பி. பதவியை குறிவைத்து காய் நகர்த்துகிறார்.

டெல்லி மேலிடத்தை ஆறு பேரும் ஆறு முனைகளில் இருந்து போட்டியிட்டு வருகிறார்கள்.காங்கிரசின் ‘கை’ யாருக்கு கை கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *