இந்த ஆண்டு ‘மிஸ் யூனிவர்ஸ்’ பட்டத்தை வென்று அசத்தியுள்ளார் இந்தியாவின் ஹர்னாஸ் சாந்து. இதன் மூலம் லாரா தத்தகாவுக்கு பிறகு சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அழகி ஒருவர் மிஸ் யூனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளார் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
‘மிஸ் யூனிவர்ஸ்’ இறுதிப் போட்டியில் ஹர்னாஸ் சாந்து அணிந்திருந்த ‘தகதகவென’ மின்னும் வகையிலான கவுன் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இந்த ஆடையை வடிவமைத்து தேசத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார் சாயிஷா ஷிண்டே என்ற திருநங்கை.
ஆடை வடிவமைப்பாளரான சாயிஷா வடிவமைத்த ஆடையை அணிந்திருந்த ஹர்னாஸ், அழகு பதுமை போலவே காட்சி அளித்தார். கவுன் மிக நீளமாக இருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். அந்த ஆடை ‘V’ நெக் (கழுத்து) வடிவில் அசத்தலாக இருந்தது. மிஸ் யுனிவர்ஸ்' போட்டி நிறைவு பெற்றதையடுத்து, ஹர்னாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அவர் வடிவமைத்த ஆடையை அணிந்த ஹார்னாஸின் போட்டோவைப் பதிவிட்டு அதில்
We did it’ என்று குறிப்பிட்டிருக்கிறார் சயிஷா. அதற்கு பதிலளித்துள்ள ஹர்னாஸ், `Thank you for the lucky charm, you are!’ என்று பதிலளித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
சாயிஷா ஷிண்டே 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம், திருநங்கையாக மாறியதாக தன் இன்ஸ்டாகிராம் தளத்தில் அறிவித்தார். பாலிவுட்டின் முன்னனி நடிகைகளான கரீனா கபூர், ஷ்ரதா கபூர், கியாரா அத்வானி, அனுஷ்கா ஷர்மா, சன்னி லியோன், தீபிகா படுகோன் போன்ற நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.