• Thu. Apr 24th, 2025

யார் இந்த மாரிமுத்து..? தூத்துக்குடி கலெக்டர் அடக்குவாரா?

ByK.RAJAN

Apr 1, 2025

நான் சொன்னதே சட்டம்… கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை தன் சமூகத்தினருக்கு வழங்கும் ஏ.பி.டி.ஓ மாரிமுத்து…மீது பொதுமக்கள் கலெக்டருக்கு புகார் அனுப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கின்றது.

நான் சொன்னதே சட்டம் என்ற பாணியில், கோவில்பட்டி ஊராட்சியில் அரசு திட்டங்களை பட்டியலின மக்களுக்கு வழங்காமல் தன் சமூகத்தினருக்கே ஓகே சொல்லி வரும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து குறித்து மாவட்ட ஆட்சியர், மனித உரிமை ஆணைய இயக்குனர் ஆகியோர்களுக்கு புகார் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம மக்கள் புலம்புகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர் என 3 உட்கோட்டங்கள், ஆழ்வார்திருநகரி, கருங்குளம், கயத்தார், கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம், தூத்துக்குடி, உடன்குடி, ஒட்டப்பிடாரம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம்
தென்திருப்பேரை, எட்டயபுரம்
என 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

இதில், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில், நாலாட்டின்புத்தூர், வில்லிசேரி, தீத்தாம்பட்டி, துரையூர், சத்திரபட்டி,சிவந்திபட்டி, கிழவிபட்டி, இடைச்செவல், கொடுக்காம்பாறை, திட்டங்குளம், பாண்டவர்மங்கலம் உள்ளிட்ட 12 ஊராட்சிகள் உள்ளன. இந்த கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் துணை வட்டார வளர்ச்சி அலுவலரான மாரிமுத்துவின் “சமூக பாசம்” குறித்துதான் தற்போது ஊர் முழுக்கப் பேச்சு உலா வருகின்றது.

இந்த மாரிமுத்து, இவர் கையெழுத்திற்காக காத்திருக்கும், காக்க வைக்கபட்டிருக்கும் கோப்புகள், பாஸ் செய்யப்படவிருக்கும் பில்களுக்கு பணம் பெறுவதில்லை. நேர்மையானவர் என சிலரால் சொல்லப்பட்டாலும், அவருக்கு சமூகப் பாசம் அதிகம். பட்டியலின சமூக மக்களுக்கு வழங்க வேண்டிய திட்டங்களை தனது உறவினர்களுக்கும், தான் சார்ந்த சமூக மக்களுக்கும் வழங்குகிறார். உறவினர்களிடம்
மாரிமுத்து “அம்பி” யாகவும், பட்டியலின மக்களிடம் “அந்நியன்” ஆகவும் நடந்து கொள்கிறார் என்கின்றனர்.

ஆளைப் பார்த்தா அழகு போல… வேலையைப் பார்த்தா இழவு போல என்பது போல் இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில், ஊராட்சி மன்றத்தால் நிறைவேற்றப்பட்டு வழங்கப்படும் காலனி வீடு, கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு முறையாக வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு இவர் மீது எழுந்துள்ளது.

பட்டியலின மக்களை தவிர்த்து, அவரது உறவினர்களுக்கும் அவர் சார்ந்த சமூகத்தினருக்கும் மட்டுமே, ஆவணங்கள் முறையாக இல்லவிட்டாலும் ஓகே சொல்லி விடுகிறாராம். இதனால் சில ஊராட்சி மன்ற செயல் அலுவலர்களும் மன உளைச்சலில் உள்ளார்களாம்.

நான் சொன்னதே சட்டம் என்கின்ற அதிகார தோரணையில் பட்டியலின சமூக மக்களை மிரட்டுகிறாராம். இவர் மீது சில கிராம மக்கள் கையெழுத்திட்டு, மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என வருத்தத்தோடு சொல்கிறார்கள் ஊர் பொதுமக்கள்.

மாரிமுத்துவின் மீதான குற்றச்சாட்டு குறித்து பஞ்சாயத்து உதவி இயக்குனர் சாந்தியிடம் கேட்டபோது, “அவர் மீது புகார் மனு வரப்பெற்றுள்ளது. அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமரிடம் இது குறித்து கேட்டபோது,

“விசாரணை நடக்கிறது. அவரின் விளக்கத்தை மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கையாக சமர்பித்து, ஆட்சியரது உத்தரவின் பேரில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சாதிகள் இல்லையடி பாப்பா… என பாரதியார் பாடிய மண்ணில் இன்னும் சாதியப் பாகுபாடா? சாட்டை சுழற்றுவாரா மாவட்ட ஆட்சியர்?