• Thu. Oct 2nd, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

சென்னை மாநகராட்சி துணை மேயர் யார்?

சென்னை மாநகராட்சியின் துணை மேயர் பதவிக்கான போட்டியில் திமுகவின் இரண்டு முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரன் ஆகியோரில் ஒருவர் சென்னை மாநகராட்சியின் துணை மேயராக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கே.கே.நகர் தனசேகரனை பொறுத்தவரை தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கவுன்சிலர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.

சென்னை மாநகராட்சி மேயர் பதவியானது பட்டியலின பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதற்கு அடுத்த நிலையில் உள்ள துணை மேயர் பதவியில் யார் அமரப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னை மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், உதயநிதி ஸ்டாலினின் நெருக்கமான வட்டத்தில் இருப்பவருமான சிற்றரசுவுக்கு தான் சென்னை துணை மேயர் பதவி எனக் கூறப்பட்டு வந்த நிலையில் புதிய போட்டியாக வந்து நிற்கிறார் கே.கே.நகர் பகுதி முன்னாள் செயலாளரும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான கே.கே.நகர் தனசேகரன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போதே விருகம்பாக்கம் தொகுதியை எதிர்பார்த்து அது கிடைக்காத காரணத்தால், தனது பொறுப்புகளை ராஜினாமா செய்வதாக கூறி அண்ணா அறிவாலயத்தில் தனது உள்ளக்குமுறலை கொட்டியவர். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் திமுகவுக்கு மிகப்பெரிய அளவில் வாக்குவங்கியை கட்டமைத்த தனக்கு தலைமை சீட் கொடுக்காதது வருத்தமளிப்பதாக கண்ணீர் வடித்தார். பிறகு ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் தலையிட்டு பேசி கே.கே.நகர் தனசேகரனை சமாதானம் செய்தனர்.

இந்நிலையில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றிபெற்றிருக்கும் தனசேகரன், சென்னை மாநகராட்சி துணை மேயர் பதவி தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இதற்காக தென் சென்னை மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மா.சுப்ரமணியத்துடன் தனக்கிருக்கும் மனக்கசப்புகளையும் மறந்து அவருடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறாராம்.

சிற்றரசு, கே.கே.நகர் தனசேகரனை போல் மேலும் சில முக்கியப் பிரமுகர்களான இளைய அருணா, மதன்குமார், மகேஷ்குமார், ராஜா அன்பழகன் என பலரும் துணை மேயர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மறைமுகத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.