அதிமுக பொதுச் செயலாளரும், மறைந்த முதல்வருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் இன்று. இதையொட்டி, ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி தமிழக செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில், ‘முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 74வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள டாக்டர் ஜெ ஜெயலலிதா வளாகத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிறுவப்பட்டுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சீர்மிகு பெருமக்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள்’ என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘அதிமுகவின் மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ் நாளிதழில் விளம்பரம் செய்துள்ளது.
ஆனால், அதிமுக ஆட்சிக் காலத்தில், கருணாநிதியின் பிறந்தநாளுக்கு இதுபோன்ற விளம்பரங்களை பார்த்ததாக நினைவில்லை. சிறந்த தலைவர்களில் ஒருவராக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளங்குகிறார்’ என, மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.