• Wed. Apr 23rd, 2025

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே? விவசாயிகள் கேள்வி..,

ByG.Suresh

Apr 4, 2025

சிவகங்கை அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதி எங்கே என்று விவசாயிகள்கேள்வி எழுப்பினர்.

சிவகங்கை அருகே அரசனூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அரசனூர், இலுப்பகுடி, மேட்டுப்பட்டி, செம்பூர், சித்தாலங்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது நெல் மூட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதுவரை ஒரு லட்சம் மூட்டைகளுக்கு மேல் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

நெல் மூட்டைகளை ஏற்றி, இறக்கும் சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் ஒரு மூட்டைக்கு ரூ.10 வீதம் அரசு நிதி ஒதுக்கியது. எனினும் இம்மையத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி என்ற பெயரில் நெல் மூட்டைக்கு ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் அரசு கொடுக்கும் ரூ.10-யை சுமைத்தூக்கும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் அதிகாரிகள் செலுத்திவிட்டு, அந்த பணத்தை வேறு வழிகளில் அந்த பணத்தை எடுத்துக் கொள்கிறார் என்று புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலத்திடம் கேட்டபோது விவசாயிகளிடம் ஒரு ரூபாய் கூட வசூலிப்பதில்லை என்று கூறிவிட்டு, சுமைத்தூக்கும் தொழிலாளர்கள் கூலி என்ற பெயரில் ரூ.20 முதல் ரூ.40 வரை வசூலிக்கின்றனர். ஆனால் சுமைத்தூக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு மூட்டைக்கு ரூ.10 அரசு ஒதுக்குகிறது. அந்த நிதியில் முறைகேடு நடைபெறுகிறது.

விவசாயிகளுக்கு வாகன வாடகை, இறக்கு, ஏற்று கூலி, நெல் மூடைகளை எடுக்க தாமதமானால், காவல் காக்க கூலி என மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை செலவகிறது. மேலும் சில கொள்முதல் நிலையங்களில் நெல் திருடப்படுகிறது. இதை தடுக்க வேண்டும். 300 மூடைகளுக்கு மேல் இருந்தால், விளைநிலங்களுக்கே நேரில் சென்று கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யும் நெல்லை சேதமடையாமல் இருக்க மேற்கூரை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து சுமைத்தூக்கும் தொழிலாளர்களிடம் கேட்டபோது, ‘ அரசு ஒதுக்கும் ரூ.10-ல் லாரி ஓட்டுநருக்கு படிக்காசு, உணவு, காவலாளிக்கு ஊதியம், சணல், சாக்கு போன்றவைக்கு செலவழிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் நாங்கள் விவசாயிகளிடம் மூட்டைக்கு ரூ.20 வசூலிக்கிறோம்’ என்றனர்.

நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ அரசு ஒதுக்கும் ரூ.10 நேரடியாக சுமைத்தூக்கும் தொழிலாளர்களின் வங்கிக்கு செல்கிறது. மற்ற செலவுகளுக்கு அரசே நிதி ஒதுக்கிவிடுகிறது. விவசாயிகளிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழும் இடங்களில் ஆய்வு நடத்தப்படும்’ என்றனர்.