டிசம்பர் 24 அன்றுவெளியான ரைட்டர் திரைப்படம், மக்களுக்கான கருத்தை சொல்வதோடு, வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.பா.ரஞ்சித் தயாரிப்பில் பிராங்க்ளின் இயக்கத்தில் சமுத்திரகனி, சுப்ரமணியசிவா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் இது.
இந்நிலையில், ‘ரைட்டர்’ படம் சிறப்பாக இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
தமிழ்சினிமாவில் மூத்த நடிகரான ரஜினிகாந்த், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்த பிறகு பொது விசயங்கள் குறித்து கருத்து கூறுவதில்லை.அதே நேரம் வழக்கம்போல தான் ரசித்த படங்களை – அப்படத்தில் பணியாற்றியவர்களை பாராட்டி வருகிறார்.இந்நிலையில், ரைட்டர் படத்தை ரஜினி பாராட்டியதாக, அப்படக்குழு தெரிவித்தது.
பட இயக்குநர் ப்ராங்க்ளின் கூறியதாவது, “ரைட்டர் படத்தைப் பார்த்த ரஜினி எனக்கும், படத் தயாரிப்பாளர் ரஞ்சித்துக்கும், நடிகர்கள் சமுத்திரகனி, சுப்ரமணியசிவா உள்ளிட்டோருக்கும் தனித்தனியாக அலைபேசி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் பல ஊர்களில் ரைட்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையிடப்பட்டு வருகிறது. ஆனால், படத்தை ரஜினி எங்கே பார்த்தார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது
இது குறித்து விசாரிக்கையில் நம்பத்தகுந்த வட்டாரங்கள், “கொரோனா பரவல் என செய்திகள் வெளியானதில் இருந்தே, படப்பிடிப்பு தவிர வேறு எங்கும் நடிகர் ரஜினி கலந்துகொள்வதில்லை. அவரது சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ள ரஜினியின் பங்களாவில், சிறு திரையரங்கம் உள்ளது. கியூப் மூலம் திரையரங்கங்களில் படம் வெளியிட்படுவது போல, ரஜினி வீட்டு திரையரங்கிலும் திரையிடப்பட்டது.
அங்கு ரஜினி, அவரது மனைவி மற்றும் இளையமகள் சௌந்தர்யா ஆகியோர் படத்தை பார்த்தனர். மூத்த மகள் ஐஸ்வர்யா, அவரது கணவரும் நடிகருமான தனுஷ் ஆகியோர் வேறு பணியில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
படம் பார்த்து முடித்தவுடனேயே, ரைட்டர் படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் சிலரை அலைபேசியில் அழைத்து ரஜினி பாராட்டினார்” என்று தெரிவித்தனர்.