உடல்நலம் மீண்டு வந்த டி. ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் மூத்தக் கலைஞர்களில் ஒருவரான டி. ராஜேந்தர் கடந்த மே மாதம் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். அவருக்கு வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
இந்நிலையில் சிகிச்சை முடிந்து அவர் நலமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதை உறுதிபடுத்துவது போல டி ராஜேந்தர், தன் மகன் சிம்பு மற்றும் மனைவி உஷா ஆகியோரோடு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.
தொடர்ந்து இன்று அவர் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தான் நலமாக இருப்பதாக பேசினார். மேலும் சிம்புவின் திருமணம் எப்போது என்று கேட்கப்பட்ட போது “திருமணம் என்பது இருமணம் சேர்வது. கடவுள் எழுதியதுதான் நடக்கும்” என்று பேசியுள்ளார்.