• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு ‘பட்டியலிட்டு’ பதிலடி கொடுத்த பினராயி

யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ‘கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில், முதல்கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள ஷாம்லி, ஹாபூர், கவுதம் புத் நகர், முசாபர்நகர், மீரட், பாக்பத், காஜியாபாத், புலந்த்ஷார், அலிகார், மதுரா மற்றும் ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 58 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

முன்னதாக, நேற்று மாலை உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மாநில மக்களுக்கு வீடியோ மூலம் வாக்கு சேகரித்தார். அப்போது, “கடந்த ஐந்தாண்டுகளில் பாஜக அரசு, உங்கள் நம்பிக்கையை மனதில் வைத்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, அர்ப்பணிப்புடன் அனைத்தையும் செய்துள்ளது. ஐந்தாண்டுகளில் நிறைய நடந்துள்ளது. முதன்முறையாக அனைத்து கிராமங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேர மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
என் மனதில் உள்ள சில விஷயங்களை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன். இந்த ஐந்து வருடங்களில் நமது மாநிலத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த ஐந்தாண்டு கால எனது முயற்சிக்கு, எனக்கு கிடைக்கும் ஆசீர்வாதமே உங்கள் வாக்கு. உங்கள் வாக்குதான் உங்கள் அச்சமற்ற வாழ்க்கைக்கு உத்தரவாதமாக இருக்கும்.

சில உத்தரப் பிரதேசத்தை கைப்பற்றி ஆட்சி அமைக்க முயல்கிறார்கள் என்பதுதான் ஒரே கவலை. அவர்கள் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொண்டாலோ, வாக்கு செலுவத்தில் இருந்து கொஞ்சம் தவறினாலோ இந்த ஐந்தாண்டுகள் நான் செய்த உழைப்புகள் கெட்டுவிடும். காஷ்மீர், கேரளா மற்றும் மேற்குவங்கம் போல உத்தரப் பிரதேசம் போல மாறிவிடும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, யோகி குறிப்பிட்டதது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால் என்ன நடக்கும் என்பதை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிப்படுத்தியுள்ளார். பினராயி தனது ட்வீட்டில், “யோகி ஆதித்யநாத் பயப்படுவது போல் உத்தரப் பிரதேசம், கேரளாவாக மாறினால், மக்களால் சிறந்த கல்வி, சுகாதார சேவைகள், சமூக நலன், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை பெறமுடியும். மேலும், மதம் மற்றும் சாதியின் பெயரால் மக்கள் கொல்லப்படாத ஒரு நல்லிணக்கமான சமுதாயமாக மாறும். அதைத்தான் உத்தரப் பிரதேச மக்களும் விரும்புவார்கள்” என்று பதிலடியாக தெரிவித்துள்ளார். பினராயி விஜயனின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

முதலில் இந்தப் பதிவை ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிட்டிருந்த பினராயி, சில மணிநேரங்கள் கழித்து இதே பதிவை இந்தியிலும் வெளியிட்டு யோகி ஆதித்யநாத்துக்கு பதிலடி கொடுத்தார்.